தமிழகம்

அதிமுக கவுன்சிலர் கொலையில் போலீஸாரால் தேடப்பட்ட மேலும் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

மணலி அதிமுக கவுன்சிலர் கொலையில் தேடப்பட்டு வந்த 5-வது நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ரா.ஞானசேகர் (50). மாநகராட்சி 21-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார். கடந்த 9-ம் தேதி மாலை மணலி பாடசாலை பகுதியில் உள்ள நண்பரின் கடையில் இருந்த இவரை 2 பைக்கில் வந்த 5 பேர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெபகுமார் (22), ராஜேஷ் (33), ராஜீவ் (23), பிரபு (24) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் ஞானசேகருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணாக ஞானசேகர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்தக் கொலை வழக்கில், தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வந்தனர். 5-வது நபரான குமரவேல் (28) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT