வாடகை வீட்டில் வசித்து வரும் நடிகை நமீதாவை காலி செய்யும்படி தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டின் உரிமையாளருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை பெருநகர உதவி உரிமையியல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
எங்கள் அண்ணா, ஏய், நான் அவன் இல்லை, பில்லா, அழகிய தமிழ் மகன், ஜெகன்மோகினி உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை நமீதா (35). சூரத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் உள்ள கருப்பையா நாகரத்தினம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மாதம் ரூ. 15 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், வாடகையை திடீரென உயர்த்தி, வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படி வீட்டின் உரிமையாளர் தன்னை தொந்தரவு செய்து வருவதாக நமீதா ஏற்கனவே நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை 13-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நமீதா மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘நான் மாதம் தோறும் முறையாக வாடகையை செலுத்தி வருகிறேன். என்னை வீட்டில் இருந்து காலி செய்வதற்கு வீ்ட்டின் உரிமையாளர் ரவுடிகளை வைத்து பல வழிகளில் முயற்சித்து வருகிறார். அமைதியான முறையில் வசிக்க எனக்கு வாடகைதாரர் என்ற முறையில் எல்லா உரிமைகளும் உள்ளது. எனது வீட்டின் உரிமையாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே அவரது உறவினர்களின் கடைகளை பணம் வாங்காமல் திறந்து வைத்துள்ளேன். அவர் என்னை வீட்டில் இருந்து வெளியேற்றினால் எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும். ஆகவே வீட்டைக் காலி செய்யக்கூறி தொந்தரவு செய்யக்கூடாது என்றும், வீட்டைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை பெருநகர 13-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.சாந்தி, ‘‘வீட்டைக்காலி செய்யச்சொல்லி வீட்டின் உரிமையாளர் நமீதாவுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.