சென்னை பல்கலைக்கழகத்துக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து (யுனிவர்சிட்டி ஆப் எக்ஸலென்ஸ்) அளிக்கப்பட்டு, ரூ.150 கோடி வழங்கப்படும் என்று யுஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் அறிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத் தின் 157-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிட அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா தலைமை வகித்தார். இணைவேந்த ரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பி.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், டிஎஸ்சி, பிஎச்டி பட்டதாரிகளுக்கும் ஆளுநர் ரோசய்யா பதக்கங்களையும், பட்டச் சான்றிதழையும் வழங்கினார். மருத்துவத் துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி வேலூர் சிஎம்சி பேராசிரியர் டாக்டர் குணசேகரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இளங்கலை, முதுகலை, பட்டயம் உள்பட பல்வேறு படிப்புகளில் 60,226 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பிஎச்டி பட்டம் பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி
தமிழக அரசின் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதன் உள்பட 213 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர். விழாவில், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் பட்டமளிப்பு விழா உரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த பல்கலைக்கழகங்களை யுஜிசி தேர்வுசெய்து அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்து பெறும் பல்கலைக்கழகங்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் பணிக்காகவும், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும் கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும்.
அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு விரைவில் யூஜிசி சிறப்பு அந்தஸ்து வழங்கி ரூ.150 கோடி நிதியுதவி அளிக்கும். மேலும் இப்பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய அந்தஸ்துக்காக தனியே ரூ.10 கோடி வழங்கப்படும். பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் (12-வது திட்டம்) பேராசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம் என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரம் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு பேராசிரியர் தேவராஜ் கூறினார்.
அமைச்சர் பி.பழனியப்பன் வாழ்த்திப் பேசும்போது, “தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 38 சதவீதமாக உள்ளது. ஆந்திரம், கேரளம், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம். இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான்” என்றார்.
முன்னதாக, துணைவேந்தர் ஆர்.தாண்டவன் வரவேற்று, ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில், பதிவாளர் பா.டேவிட் ஜவகர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.