தமிழகம்

தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்

எஸ்.சசிதரன்

தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளராக பதவியேற்கிறார் கேரளத்தின் மோகன் வர்கீஸ் சுங்கத். இவரது மனைவியும் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிதான்.

கேரளத்தைச் சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன், தமிழகத்தின் 41-வது தலைமைச் செயலாளராக 2012-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர். அவரது பதவிக்காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பது என்று தமிழக அரசு ஆலோசித்து வந்தது.

ஒரே நாளில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.தர் மற்றும் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, நாடாளு மன்ற தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

அதனால், புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆணையத்தின் ஆலோசனையின்படியே புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணைய அனுமதி கிடைத்த தையடுத்து, புதிய தலைமைச் செயலாளர் நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆளுநர் ரோசய்யா வழிகாட்டுதலின்பேரில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், மார்ச் 31-ம் தேதி மதியம், ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வுபெற்றபின் அப்பொறுப்பை ஏற்பார். மேலும், விழிப்புணர்வு ஆணையர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையராகவும் அவர் கூடுதலாக பதவி வகிப்பார்’ என கூறப்பட்டுள்ளது.

மற்றொரு உத்தரவில், ‘தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் அரசு ஆலோசகர் என்னும் ஓராண்டு கால அல்லது அதற்கான தேவை இருக்கும் வரை (இவற்றில் எது குறைவோ) தற்காலிக பதவி புதிதாக உருவாக்கப்படுகிறது. இந்தப் பதவியை வரும் 31-ம் தேதி பணி ஓய்வுபெற்ற பிறகு, ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைக்குறிப்பு

தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளராக பதவி ஏற்கவுள்ள மோகன் வர்கீஸ் சுங்கத், 1978-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தார். எம்.எஸ்சி (விலங்கியல்) பட்டதாரி. இவரது மனைவி ஷீலாராணி சுங்கத்தும் ஐஏஎஸ் அதிகாரிதான். தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அவர், தமிழக கைவினைப் பொருள் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய சாம்பியன்

மோகன் வர்கீஸ் சுங்கத், தேசிய ஸ்க்ராபிள் (எழுத்துக்களை வைத்து விளையாடுவது) சாம்பியன் பட்டம் வென்றவர். இந்த விளையாட்டில் உலக உளவில் 21-வது இடத்தில் இருந்தவர். குறுக்கெழுத்து விளையாட் டிலும் வல்லவரான வர்கீஸ், அது தொடர்பான புத்தகத்தையும் எழுதியுள்ளார்.உயர்கல்வி, கால்நடை பராமரிப்பு, வேளாண் மை உள்ளிட்ட துறை களின் செயலாளராக பணியாற் றியுள்ளார். தமிழ்நாடு எரிசக்தி முகமை தலைவர், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைவர் போன்ற பொறுப்புக்களையும் வகித்துள் ளார். தருமபுரி கலெக்டராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT