தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘கேப்டன்’ என்ற சொல்லை முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கே.தண்டபாணி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
‘கேப்டன்’ என்பது ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியாகும். சினிமா நடிகரும் எம்.எல்.ஏ.வுமான விஜயகாந்த், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததில்லை. இந்நிலையில், கேப்டன் என்ற சொல்லை விஜயகாந்த் முறைகேடாகப் பயன்படுத்துகிறார். இது சட்ட விரோதமானது. இந்திய ராணுவத்தின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும். கேப்டன் என்ற சொல்லைப் பயன்படுத்த விஜயகாந்துக்கு உரிமை இல்லை.
ஆகவே, விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை சாலிகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எனது புகாரின் அடிப்படையில் விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தண்டபாணி கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மனுதாரரின் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பின், அது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை தேவைப்பட்டால் ஒரு வார காலத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
புகார் மனுக்களை காவல் துறையினர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காவல் துறையினர் செயல்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.