சிட்லப்பாக்கம் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மற்றும் துர்நாற்றம் கரணமாக அதன் அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் தினமும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள ஏரிக்கரையில் கொட்டப்படுகிறது. இறைச்சிக் கழிவுகளும் இங்கு போடப்படுகின்றன. குப்பைக் கிடங்கின் அருகிலேயே சிட்லப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. குப்பைக் கிடங்கிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் பள்ளியில் படிக்கும் மாணவர்களும், சுகாதார நிலையத்துக்குச் செல்லும் நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது இந்த குப்பைக்கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட் டது. 6 மாதத்துக்கு மேல் ஆகியும் இதுவரை புதிய சுற்றுச்சுவர் கட்டப் படவில்லை. சுற்றுச்சுவருக்கு பதி லாக, இரும்பு தகடு வைத்து குப்பைக் கிடங்கு மறைக்கப்பட் டுள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், குப்பைக் கிடங்கில் இருந்து துர் நாற்றம் அதிகமாக வீசி வருகிறது.
மேலும் மர்ம நபர்கள் அடிக்கடி குப்பைக் கிடங்குக்கு தீ வைத்து விடுகின்றனர். அதுபோன்ற நேரங்களில் அந்த பகுதியே புகை மூட்டமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வகுப்பறைகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் காற்றை சுவாசித்துக்கொண்டே இருப்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலையும் மோசமாகிறது. வாங்கும் சம்பளத்தில் பாதியை மாத்திரை, மருந்து வாங்குவதற்கே செலவு செய்ய வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
சேர்க்கை குறைவு
குப்பைக் கிடங்கில் இருந்து வரும் புகை மூட்டம் மற்றும் துர்நாற் றத்துக்கு பயந்து பெற்றோர் தங்க ளுடைய குழந்தைகளை பள்ளிக்கு சரியாக அனுப்புவதில்லை. அந்தப் பள்ளியில் படித்துவந்த சில மாணவர்களும் இதற்கு பயந்து வேறு பள்ளிக்கு மாறுகின்றனர். இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் புகையுடன் சேர்ந்து துர்நாற்றத்தையும் சுவாசிப்பதால், அவர்களின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் பேரூராட்சி அலுவலகம் வரை பலமுறை புகார் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.