தமிழகம்

சோமனூரில் இயக்கம்; பல்லடத்தில் நிறுத்தம்: விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் நடப்பது என்ன?

செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2.25 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதற்கு நூல், பாவு சப்ளை செய்து துணியாக நெய்து வாங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆயிரம் பேர் உள்ளனர். விசைத்தறிகளை சொந்தமாக வைத்துள்ளவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூல் வாங்கி, பிக் (நூலின் தரம்) மற்றும் மீட்டர் (நீள, அகல அளவு) அடிப்படையில் கூலி நிர்ணயம் செய்து தொகை வாங்குகிறார்கள்.

இதில் நூலை நெய்வதற்கான சொந்த தறி, மின்சாரம், பராமரிப்பு செலவுகள் விசைத்தறியாளர்களை சேர்ந்தது. இப்படி சொந்தமாக விசைத்தறி வைத்து துணி நெய்து தரும் விசைத்தறியாளர்கள் தம்மிடம் உள்ள விசைத்தறிகளை ஓட்ட கூலிக்காரர்களை வைத்துள்ளனர். இவர்களும் 12 மணி நேரம் இரவு, பகல் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிந்து மீட்டர், பிக் அடிப்படையில் கூலி பெற்றுக் கொள்ளுகிறார்கள்.

இந்த வகையில் கூலிக்கு நெசவு செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேரும், விசைத்தறி கூலிகள் சுமார் ஒரு லட்சம் பேரும் இந்தப் பணியில் பலனடைந்து வருகிறார்கள்.

விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, கூலி உயர்வு, தறிகளின் பராமரிப்பு செலவு உயர்வு போன்ற காரணங்களால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.

இதில் இணக்கம் ஏற்படாத சூழலில், தொழிலாளர் துறை ஆணையர் முன்னிலையில் பேசி தீர்த்துக் கொள்வதுண்டு. அப்போதும் சுமூக முடிவு எட்டாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதன்படி, 2014-ல் ஏற்படுத்தப்பட்ட கூலி ஒப்பந்தப்படி கூலி உயர்வை வழங்காமல் பழைய கூலியையே 2015-ம் ஆண்டிலிருந்து தந்து வந்தனர் ஜவுளி உற்பத்தியாளர்கள்.

நூல் விலை உயர்வு, ஜவுளி விலை குறைவு, பல ஆயிரம் கோடி மதிப்பிலான துணிகள் தேக்கம், வடநாட்டு சந்தையில் சரிவு ஆகியவற்றை காரணம் காட்டி வந்தனர் அவர்கள். அதை கூலிக்கு நெசவு செய்வோர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்கு மார்க்கெட் இல்லை என்பதற்காக நாங்கள் எங்கள் கூலிக்காரர்களுக்கு உரிய கூலி கொடுக்காமல் இருக்க முடியுமா? இதர செலவுகளை செய்யாமல் இருக்க முடியுமா? மின் கட்டணத்தை செலுத்தாமல் இருக்க முடியுமா? என்றெல்லாம் பிரச்சினை கிளம்ப, ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

தன்னிடம் குறைந்த கூலிக்கு நெசவு செய்து கொடுக்கும் தறிகாரர்களிடம் மட்டும் நூல் கொடுத்து துணி வாங்க ஆரம்பித்தனர். இதனால் தறிகாரர்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்கள், ஆட்சியர்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்ட விஷயத்தை கூட அமல்படுத்தாது தட்டிக்கழித்து வந்தனர் ஜவுளி உற்பத்தியாளர்கள். அதனால் அடிக்கடி வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.

இவ்வாறு அடிக்கடி போராட்டம் நடப்பதும், உடன்பாடு ஏற்படுவதும் தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2011 ஆண்டுக்கு முந்தைய கூலியை வழங்க ஆரம்பித்தனர் ஜவுளி உற்பத்தியாளர்கள். இதனால் பாதிக்கப்பட்ட விசைத்தறியாளர்கள், 6 ஆண்டுகளுக்கு முந்தைய கூலியைக் கொடுத்தால் எப்படி என்று தட்டிக் கேட்டனர். அப்படி கேட்டவர்களுக்கு பாவு, நூல் கிடைக்கவில்லை. இதனால் சோமனூர், திருப்பூர் பகுதியில் மட்டும் 60 சதவீதம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்பட்டது.

கடந்த வாரம் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி, ஆட்சியர், அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து முறையிடுவது, அவர்கள் இதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் 15 நாட்களில் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

இது தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை ஆணையரிடம் முறையிட்டனர். ஆட்சியர்கள் இருவரிடமும் பேசி, தேதி கேட்டு, அதே நாளில் ஜவுளி உற்பத்தியாளர்களையும் வரவழைக்க ஏற்பாடு செய்து விட்டு, உங்களையும் அழைக்கிறோம்; அதுவரை போராட்டம் நடத்த வேண்டாம் என்று தொழிலாளர் ஆணையர் கேட்டுக் கொண்டாராம். அதற்காக இன்னும் 15 நாட்கள் பொறுத்திருப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள் விசைத்தறியாளர்கள் சங்கத்தினர்.

இந்தநிலையில், இந்த விசைத்தறியாளர்கள் சங்கம் தவிர்த்த மீதியுள்ள சங்கத்தினர், கடந்த 1-ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாத, சோமனூர் பகுதி விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகி கூறியதாவது: ஜவுளி உற்பத்தியாளர்கள் துணிகள் தேக்கம், நூல் விலை ஏற்றம், அதற்கேற்ற விலை துணிக்கு இல்லை என்று மட்டும் சொல்லுகிறார்களே தவிர, துணிகள் எவ்வளவு தேக்கம், எந்த வகையில் நஷ்டம், நூல் விலை குறித்தெல்லாம் கூறுவதில்லை. அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகள், உள்ளூர் சந்தைக்கும், வடநாட்டு சந்தைக்கும் அனுப்பப்படுகிறது.

கொடுத்த கூலியை வாங்கிக் கொள்பவர்களுக்கு மட்டும் நூல், பாவு கொடுக்கிறார்கள். இதனால், பலரும் வேலை நடந்தால் போதும் என்று அவர்களை நாடுகின்றனர். அவர்களை எதிர்த்துப் பேசவும் முடிவதில்லை.

தற்போதும் கூட, நீங்கள் எல்லாம் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுங்கள். அதன்மூலம் தேங்கிய துணிகள் விற்பனையாகி விடும், துணி தேவை அதிகரித்து விடும். அதற்கேற்ப தறிகள் இயங்க ஆரம்பித்து விடும் என்று சோமனூர் தவிர்த்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தற்போதைய ஒரு பகுதி போராட்டம் நடக்கிறது.

இரு வருடங்களாக பிடித்து வைத்துள்ள கூலிப் பணத்தைக் கொடுக்க வேண்டும். இனி நெய்யும் துணிக்கான கூலியை பிடித்தமில்லாமல் கொடுக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தொழிலாளர் துறை ஆணையர் உரிய தீர்வுகாணாவிட்டால், நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இப்போது சோமனூரில் 90 சதவீதம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களும் தறிகளை இயக்கி வருகிறார்கள். அவர்களின் தறிகாரர்களுக்கு பாவு, நூல் சப்ளை செய்து வருகிறார்கள் என்றார்.

தற்போது உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர், கண்ணம்பாளையம், 63 வேலம்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில் விசைத்தறிகளில் நெய்யப்படும் துணி ரகங்கள் சோமனூர் ரகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும்.

10 கவுன்ட், 20 கவுன்ட் நூல்களில் நெய்யப்படும் தடியான துணி ரகங்கள் அவை. சோமனூர் ரகங்கள் 40 கவுன்ட், 30 கவுன்ட் நூல்களில் நெய்யப்படும் சன்ன ரகம். தடியான பல்லடம் ரகங்கள் வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றாலும், சோமனூர் ரகங்கள் அளவுக்கு அங்கே செல்வதில்லை. சோமனூர் ரகங்கள் அளவுக்கு தேக்கமுமில்லை. எனினும் பிரச்சனை பொதுவானதுதான். ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், சோமனூர் ரக விசைத்தறியாளர்களும் பங்கேற்பது தவிர்க்க முடியாது என்கிறார்கள் சோமனூர் ரக விசைத்தறியினர்.

SCROLL FOR NEXT