‘நீட்’ தேர்வுக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் மேலும் ஒரு மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடுமாறு மாணவி வலியுறுத்தி உள்ளார்.
மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் மே 7-ம் தேதி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாக்கள் இடம் பெறாததால், ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்கான மாணவர்களைத் தேர்வு செய்வது என்பது ஒரே அளவீடாக அமையாது. இதனால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரை, திருச்சியைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் உயர் நீதி மன்றக் கிளையில் கடந்த மே 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட நீதிபதிகள் தடை விதித்து விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் உயர் நீதிமன்றக் கிளையில் நேற்று முன்தினம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:
‘நீட்’ தேர்வில் நாடு முழுவதும் ஒரே சீரான வினாத்தாள் வழங்கப் படவில்லை. ஆங்கில மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியைவிட, தமிழ், இந்தி, குஜராத்தி மொழி வினாத்தாளின் கேள்விகள் எளிதாக இருந்தன. வினாத்தாள்கள் சீராக இல்லாத போது தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு சரியாக இருக்காது.
எனவே, கடந்த மே 7-ம் தேதி நடந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்துவிட்டு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசார ணைக்கு வருகிறது.