தமிழகம்

4,500 பிரபலங்களின் புகைப்படத்தை சேகரித்து சாதனை: கின்னஸில் இடம் பிடிக்கும் முயற்சியில் திருவட்டாறு பெருமாள்

என்.சுவாமிநாதன்

முன்னாள் முதல்வர் காமராஜர் முதல் தற்போதைய நடிகர்கள் வரை 4,500 உலக பிரபலங்களின் கையெழுத்துடன் கூடிய புகைப் படங்களை சேகரித்து திருவட்டாறு முதியவர் கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறைச் சேர்ந்தவர் மதிமயக்கும் பெருமாள் (63). இவரது வீட்டின் நடுக்கூடத்தில் தமிழக நடிகர்கள் தொடங்கி உலக அரசியல் பிரபலங்கள் வரை ஏறக்குறைய 4,500-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் புகைப்படங்கள், அவர்களது கையெழுத்துடன் அழகு சேர்த்து வருகிறது. 40 ஆண்டாக இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். திருவட்டாறு தபால் நிலையத்தில் அவரை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

காமராஜரிடம் தொடக்கம்

எனது சொந்த ஊரு அகஸ்தீஸ்வரம். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து, ஓய்வுக்கு பின்னர் திருவட்டாறில் வசிக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது என்னுடன் படித்த மாணவர் தபால் தலை சேகரித்தார். அவருக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைச்சுது. இது எனக்குள்ளும் ஏதாவது புதுமையை செய்யனும்ன்னு ஒரு தேடலை உருவாக்குச்சு.

பள்ளி படிப்பு முடிந்து தட்டச்சு பயிற்சிக்கு போனபோது அப்போதைய முதல்வர் காமராஜ ரிடம் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் கேட்டு கடிதம் அனுப் பினேன். மூன்றாவது நாளில் புகைப்படம் வந்தது. தொடர்ந்து அமைச்சர் கக்கனுக்கு அனுப் பினேன். அவரும் அனுப்பினார். தற்போது 4,500 கையெழுத்து களைத் தாண்டி நிற்கிறது.

எதிர்ப்பும், மரியாதையும்

எனது 6 வயதில் என் பெற்றோர் இறந்துட்டாங்க. அண்ணணோட அரவணைப்பில்தான் வளர்ந்தேன். தொடக்கத்தில் இதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. ஒவ் வொரு தலைவர்களும் பதில் அனுப் பும்போது அது மரியாதையாக மாறி விட்டது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், நரேந்திரமோடி என பிரதமர்களின் கையெழுத் துடன் கூடிய போட்டோகிராஃப் சேர்ந்து விட்டேன். வாஜ்பாய் பிரத மராக இருக்கும் போது கடிதம் அனுப்பிய மறுநாளே புகைப் படத்தை அனுப்பி வைத்து விட்டார். இதேபோல் நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா என ஏராளமானோ ரின் கையெழுத்து உள்ளது.

ஜாக்கிசானின் கையெழுத்தை பெற டோக்கியோ, ஜப்பான் என முகவரி இட்டு கடிதம் எழுதினேன். அப்போது அவர் ஹாங்காங்கில் வசித்துள்ளார். அந்த கடிதம் தபால் துறை மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, கையெழுத்துடன் கூடிய புகைப்படம் வந்தது. அந்த பொறுப்புணர்வு நமது அஞ்சல் துறையிடம் இல்லை.

நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, சிவகுமார், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கவிஞர் வாலி, வைரமுத்துன்னு பட்டியல் நீளும். ஹாலிவுட் நடிகர் அர்னால் டிடம்கூட ஆட்டோகிராஃப்வித் போட்டோகிராஃப் வாங்கி விட்டேன்.

சிக்கலும் இருந்தது

சச்சின் டெண்டுல்கர் கையெழுத் திட்ட புகைப்படத்தில் தண்ணீர் பட்டு விட்டது. இதை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். உடனே கூடு தலாக 2 புகைப்படங்களில், கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.

இப்படி சேகரித்ததில் ஒரு சிக்க லும் ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுக்கு முன்னர் இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த என்.சி.விஜய்க்கு கையெழுத்திட்ட புகைப்படம் கேட்டு கடிதம் அனுப் பினேன். அவர் என்னை தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு, 3 உயர் அதிகாரிகளை விசாரணைக்கு அனுப்பினார். உள்ளூர் காவலர் களுக்கு நிலைமையை விளக்கி புரிய வைத்தேன். இன்னும் சிலர் என்னை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து புகைப்படத்தை கொடுத்தனர்.

இதை சேகரிக்க கடிதப் போக்கு வரத்துக்கு ரூ. 6 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். கின்னஸில் இடம் பிடிப்பதே எனது லட்சியம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இதை கண்காட்சியாக வைக்க உள்ளேன் என்றார் அவர்.

30 ஆண்டாக கிடைக்காத கையெழுத்து

மதிமயக்கும் பெருமாள் மேலும் கூறும்போது, “உலக வரைபடத்தில் தேடும் அளவுக்கு தொடர்பு இல்லாதவர்களிடம்கூட புகைப்படத்துடன் கூடிய கையெழுத்தை பெற்று விட்டேன். ஆனால், கடந்த 30 ஆண்டாக கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இதுவரை பதில் இல்லை.

கருணாநிதிக்கு கடிதம் அனுப்பும்போது, அறிவாலயம், கோபாலபுரம், சிஐடி காலனி என்ற 3 முகவரிக்கு அனுப்புவேன். ஜெயலலிதாவுக்கு அதிமுக தலைமை அலுவலகம், போயஸ்கார்டன், தலைமை செயலகம் என்று 3 முகவரிக்கு அனுப்புவேன். இதுவரை பதில் வந்ததே இல்லை. அதுதான் வருத்தமாக உள்ளது” என்றார் அவர்.

SCROLL FOR NEXT