ஆட்டோக்களில் மீட்டர் போட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் 50 இடங்களில் நாளை (25-ம் தேதி) தொடங்கி 30-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி.) மாநில பொது செயலாளர் சேஷசயனம் கூறியதாவது:
தமிழக அரசு கட்டணம் நிர்ண யிக்கும்போது ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. குறிப்பாக இலவசமாக ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் வழங்குவது, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயிக்க முத்தரப்பு கமிட்டி அமைப்பது, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் டாடா மேஜிக், அபே போன்ற ஆட்டோக்கள் மீது நடவடிக்கை என பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
இப்போது, போக்குவரத்துத் துறை போலீஸாருடன் இணைந்து கடுமையான அபராதம் விதிக் கப்படுகிறது.
மேலும், ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் தினமும் கிடைக்கும் கணிசமான தொகையைக் கொண்டுதான் அன்றாட வாழ்க்கையை நடத்து கின்றனர். இந்நிலையில், ஆட்டோக்களை பறிமுதல் செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள். எனவே, தொழிலாளர்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதிகமாக அபராதம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி போக்குவரத்து ஆணையர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.
சிறப்பு முகாம்
மேலும், ஆட்டோக்களில் மீட்டர் போட்டு, அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை முதல் 30ம் தேதி வரையில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கியமான ரயில் நிலையங்கள், முக்கியமான பஸ் நிலையங்கள் என 50 இடங்களை தேர்வு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.