தமிழகம்

தைப்பூச விழாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வறட்சியால் பழனி கோயில் நிர்வாகம் தவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பழனி நகரில் வறட்சி காரணமாக தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் குடிநீருக்கும், புனித நீராடவும் தவிக்கும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவற்றில் தைப்பூசத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது.

சிவபெருமான் நடராஜராக தனித்து நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகே இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதேபோல், ஆனந்தத் தாண்டவமாட உமாதேவிக்கு ஆசை ஏற்பட்டது. நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக் காட்சி அருளிய நாளே தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா ஜன.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்களில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தருவார்கள்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி கோயிலில் விசேஷ ஏற்பாடுகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் வரும் 26-ம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, தங்குமிடம், மருத்துவ வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்.

இந் நிலையில், பழனியில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் நிலவும் வறட்சியால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பழனி கோயிலுக்கு நகராட்சி நிர்வாகம், தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

ஆனால், தற்போது நகராட்சியால் கோயிலுக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க முடிகிறது. அதனால், கோயில் நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை சொந்தமாக ஆழ்துளை கிணறு அமைத்து சமாளித்து வருகிறது. தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் சண்முகா நதி, இடும்பன் குளத்தில் குளித்துவிட்டு கோயிலுக்கு கிரிவலம் செல்வார்கள். தற்போது சண்முகா நதியும், இடும்பன் குளமும் வறண்டு காணப்படுகிறது. மேலும், போதுமான கழிப்பிட வசதியில்லை. இந்த சிரமத்தை தவிர்க்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழனி கோயிலுக்கு தினசரி ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரும், அடிவாரம் மற்றும் மற்ற பயன்பாட்டுக்கு சேர்த்து சாதாரண நாள்களில் தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. நகராட்சி 4 லட்சம் லிட்டர் மட்டுமே தருவதால், குடிநீருக்கு சிரமமாக உள்ளது. தைப்பூசத் திருவிழாவில் தினசரி 15 லட்சம் லிட்டர் தண்ணீராவது தேவைப்படும். அதனால், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்று பழனி, ஒட்டன்சத்திரம் மற்ற நகராட்சிகளில் இருந்து கூடுதலாக திருவிழா நாள்களில் மட்டும் குடிநீர் வாங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்கி நிலைமையை சமாளிக்கவும் முடிவு செய்துள்ளோம், புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை திறக்க உள்ளோம்'' என்றார்.

SCROLL FOR NEXT