நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் நாற்று நடவு செய்யும் பணிகள், நடைபாதை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை பெய்யாததால் பூங்கா பகுதியில் உள்ள 7 குளங்கள் வறண்டதால், மலர்ச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு பாய்ச்சப்பட்டன. குளங்களும் நிரப்பப்பட்டன.
தற்போது, புல்தரை பராமரிப் புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்யாத பட்சத்தில், மே மாதம் நடக்க இருக்கும் மலர்க் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்படும் என பூங்கா ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழை, தோட்டக்கலைத் துறையினருக்கு கை கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி கூறும்போது, “மழை இல்லாததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் கோடை சீசனுக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டன. மலர்ச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச லாரி தண்ணீர் வாங்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பெய்த மழை தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், மலர்ச் செடிகள் வளர்ந்து பூக்கள் பூக்கத் தொடங்கிவிடும். மலர் மற்றும் பழக் கண்காட்சிக்கான ஆயத்த கூட்டங்கள் விரைவில் நடத்தப்பட்டு, தேதிகள் முடிவு செய்யப்படும்” என்றார்.