மத்திய அரசுடன் வங்கி ஊழியர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் பணி, ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்ச லம் கூறியதாவது: வங்கி ஊழியர் களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் நாங்கள் நிர்வாகத் துடன் 14-வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தினோம். அதில் தோல்வியே ஏற்பட்டது. பின்னர், மாலையில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையர் பி.பி.மித்ராவுடன் பேச்சு நடத்தினோம். அதிலும், உடன்பாடு ஏற்படவில்லை. 11 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு அளிக்கவே ஒப்புக் கொண்டனர். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, திட்டமிட்டபடி, வரும் 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம். இதில், பொதுத்துறை, தனியார், அயல்நாட்டு வங்கிகளைச் சேர்ந்த மொத்தம் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால் பணிப் பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கணக்குகள், பங்குச் சந்தை வியாபார கணக்கும் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.