போச்சம்பள்ளி அருகே பழுதான சாலையால் பேருந்துகள் இயக்க மறுக்கப்படுவதால், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் ஆனந்தூர் கிராமத்திலிருந்து அக்ரஹாரம் கிராமம் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு செல்லும் சாலையில் சின்ன ஆனந்தூர், சின்னகாமாட்சிப்பட்டி, மோட்டூர், வீரன்வட்டம், பெரியகாமாட்சிப் பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும், பணிக்குச் செல்வோர், விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யவும் ஏராளமானோர் நாள்தோறும் ஆனந்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதிக்குச் செல்கின்றனர்.
இதற்காக 4 அரசு பேருந்துகள் ஆனந்தூரில் இருந்து அக்ரஹாரம் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அக்ரஹாரம் செல்லும் சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால், பேருந்துகள் அனைத்தும் ஆனந்தூர் வரை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சாலை பழுதால் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க மறுக்கின்றனர். அடிக்கடி டயர் பஞ்சர் ஏற்பட்டு, பொருட்கள் சேதமாகிவிடுகிறது. அதற்கான இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர்களிடம் வசூலிப்பதால், சாலை சீராகும் வரை பேருந்துகள் இயக்க முடியாது என கூறுகின்றனர். இதே போல் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களும் பெரும்பாலும் கிராமத்திற்கு வருவதை புறக்கணித்து விடுகின்றன.
புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் சுமார் 5 கி.மீ தூரம் நடந்தே சிரமத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர். எனவே ஆனந்தூர் - அக்ரஹாரம் இடையே புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.