தமிழகம்

பெண்களின் பாதுகாப்புக்கு சீருடை அணியாத காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பெண்களின் பாதுகாப்புக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சீருடை அணியாத காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஐடி பொறியாளர் சுவாதி, விழுப்புரம் அடுத்த வ.பாளையம் கிராமத்தில் சிறுமி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரியில் மாணவி சோனாலி, தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரு நாட்களுக்கு முன் திருச்சியில் மோனிகா என்ற மாணவியும், புதுச்சேரியில் அன்னாள் தெரசா என்ற மாணவியும் கத்தி குத்துக்கு ஆளாகி சாவின் நுழைவாயில் வரை சென்று திரும்பியுள்ளனர். விருத்தாச்சலத்தை அடுத்த பூதாமூர் என்ற இடத்தில் தனசேகரன் என்பவரால் தாக்கப்பட்டு, தற்கொலைக்கு முயன்ற புஷ்பலதா என்ற செவிலியர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இத்தனை உயிரிழப்புகளுக்கும், உயிர் போராட்டங்களுக்கும் காரணம் சில மனித மிருகங்கள் ஒருதலைக் காதல் என்ற பெயரில் நடத்திய மகளிருக்கு எதிரான வன்முறை தான். மனிதர்களாக பிறந்தவர்கள் இப்படி மிருகங்களாக மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

காதல் என்பது மனிதர்களுக்கு வரக்கூடாத ஒன்றல்ல. ஆனால், அந்த அற்புதமான உணர்வு எப்போது ஏற்பட வேண்டுமோ, அப்போது தான் ஏற்பட வேண்டும். படிக்க வேண்டிய வயதில் கட்டாயக் காதல் என்ற வன்முறையில் ஈடுபட்டு அப்பாவிப் பெண்களை கொலை செய்யும் அளவுக்கு கொடியவர்களாக மாறுகின்றனர் இளைஞர்கள். பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதுடன், அத்தகைய பெண்களை எவ்வாறு படுகொலை செய்வது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இந்த சீரழிவுக்கு காரணம் ஆகும்.

அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களாக இருப்பவர்கள் முற்போக்குவாதம் பேசுவதாகவும், புரட்சி செய்வதாகவும் கருதிக் கொண்டு இளைஞர்களிடம் யாரைக் காதலிக்க வேண்டும். எப்படிக் காதலிக்க வேண்டும் என போதிப்பதை நிறுத்த வேண்டும். காதலுக்காக கொடி பிடித்த முற்போக்குவாதிகள், பெண்களுக்கு எதிராக கடந்த சில நாட்களில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் கொலைகளைக் கூட கண்டிக்க முன்வராததிலிருந்தே அவர்களின் நோக்கத்தை உணரலாம்.

இந்த விஷயத்தில் மற்ற அனைத்துத் தரப்பினரையும் விட அரசுக்குத் தான் அதிக பொறுப்பு உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை பாடவேளைகளை கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள் செல்லும் பாதைகளிலும் சீருடை அணியாத காவலர்களை சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் பெண்களை பின்தொடர்ந்து தொல்லை தருவோரை கைது செய்து தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் பெற்றோர் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்து செயல்பட்டு பெண்களின் பாதுகாப்பையும், கல்வி வாய்ப்புகளையும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT