மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்.சின்னத்துரை திடீரென மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக ஏ.கே.செல்வராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக 4 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த இடங்களுக்கான வேட்பாளர்களின் பட்டியலை கடந்த 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
எஸ்.முத்துக்கருப்பன், என்.சின்னத்துரை, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 4 பேருமே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வேட்பாளர் என்.சின்னத்துரை, சனிக்கிழமை திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அதிமுக அமைப்புச் செயலாளரான ஏ.கே.செல்வராஜ் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாற்றத்துக்கான பின்னணி
கடந்த 2006 முதல் 2010-ம் ஆண்டு வரை மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த காலத்தில், அரசு பணம் ரூ.2 கோடியை சின்னத்துரை முறைகேடு செய்ததாக வீரபாண்டியன்பட்டணத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் நலச்சங்க தலைவர் எம்.கணேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான புகார் குறித்து விசாரணை நடத்த அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அரசு சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் அளித்த பதிலில், இந்த புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டதால், கணேசனின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இச்சூழ்நிலையில்தான் சின்னத்துரை மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவசரமாக, சின்னத்துரை மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார். சின்னத்துரை மாற்றப்பபடவும், கட்சியிருந்து நீக்கப்படவும் இந்த புகாரே காரணம் எனச் சொல்லப்படுகிறது.
செல்வராஜ் குறித்து...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆதிமாதையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.கே.செல்வராஜ், பி.ஏ பட்டதாரி. திருமணம் ஆகாதவர். அதிமுகவில் கிளைச் செயலாளர் தொடங்கி பல்வேறு பதவிகளை வகித்த இவர், 2001-ல் எம்.எல்.ஏ ஆனார். அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே அமைச்சர் பதவியை இழந்தார். அதன்பிறகு கோவை வடக்கு மாவட்டச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்களை வகித்தார். தற்போது மாநில அமைப்புச் செயலாளர், மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர், கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்து வருகிறார்.