காரைக்கால் கடலோரக் காவல் படைக்கு 3 அதிநவீன ரோந்துக் கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
வங்கக் கடல் பகுதியில் இலங்கையின் ஆதரவோடு சீனாவின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கடல் பகுதி வழியாக தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத் துறையும் எச்சரித்துள்ளது. எனவே, காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளையும், கடல் பகுதியையும் கண்காணிக்க காரைக்கால் கடலோரக் காவல் படைக்கு 3 அதிநவீன கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் தயாரான 3 கப்பல்களும் காரைக்கால் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு நேற்று நடைபெற்ற விழாவில், புதுவை முதல்வர் ரங்கசாமி ரோந்துக் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, அவற்றின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.
கடலோரக் காவல் படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. ஷர்மா முன்னிலை வகித்தார். புதுச்சேரி துறைமுக அமைச்சர் மு.சந்திரகாசு, தொழிலாளர் துறை அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார், சிவா, பாலன், காரைக்கால் ஆட்சியர் வல்லவன், துறைமுக மேலாண் இயக்குனர் ரெட்டி, தலைவர் வெற்றிவேல் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, “ஒரு காவல் படை முகாமுக்கு 3 ரோந்துக் கப்பல்கள் வழங்குவது இதுதான் முதல் முறை. குறிப்பாக, காரைக்கால் முகாமுக்கு 3 ரோந்துக் கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. கடல் வழி பாதுகாப்பில் அக்கறை கொண்டு மத்திய அரசு கடலோரக் காவல் படைக்கு அதிநவீன ரோந்துக் கப்பல்களை வழங்கி வருகிறது” என்றார்.
பின்னர் கிழக்கு மண்டல கடலோரக் காவல் படை ஐ.ஜி. எஸ்.பி.ஷர்மா நிருபர்களிடம் கூறுகையில், “இந்த 3 ரோந்துக் கப்பல்களும் புதுச்சேரி, தமிழக கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். அந்நியர்களின் ஊடுருவலைக் கண்காணிப்பதுடன், மீனவர்கள் கடலில் சிக்கித் தத்தளித்தால், அவர்களைக் காப்பாற்றும் பணியையும் மேற்கொள்ளும்” என்றார்.