தான் கற்றுக்கொண்டதை எல்லாம் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுடன், இன்றைய இளைஞர்களிடம் இருந்து நவீனத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினார் பாலுமகேந்திரா என்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவுக்கு மதுரையில் தமுஎகச சார்பில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.கவிதாகுமார் தலைமை வகித்தார்.
தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
இயக்குநர் பாலுமகேந் திராவுக்கும், தமுஎகசவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமுஎகச மாநில மாநாடு இரண்டுக்கும் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்ததோடு மட்டுமின்றி தோழர்களுடன் நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டார். தன்னையும், தன் படைப்பு குறித்தும் கறாரான பார்வை கொண்ட கலைஞராக இருந்த பாலுமகேந்திரா, தமுஎகச விருது வழங்கும் விழாவில் முக்கியமான விஷயத்தை எடுத்துரைத்தார்.
ஒரு படைப்பாளியின் மறைவுக்குப்பின் அவரைப் பற்றி மதிப்பீடு செய்யும் போது, அவன் தேங்கியிருந்த காலத்தைப் பற்றி மதிப்பிடக்கூடாது என்றார். அவருடைய பல படைப்புகள் மீது அவருக்கு மரியாதை இல்லை. தேசிய விருது பெற்ற வண்ணவண்ணப்பூக்கள், நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் விழுந்தால் போன்ற படங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
வீடு, சந்தியாராகம், மூன்றாம் பிறை, மலையாளத்தில் ஓடங்கள் போன்ற படங்களைத்தான் பாலுமகேந்திரா விரும்பினார்.
நம் அமைப்பின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்பது இலக்கியத்தின் மீதான நம்பிக்கையாகும். நாம் அழைத்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர் வந்தார். மதுரையில் நடைபெற்ற இது வேறு இதிகாசம் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். தன்னிடம் உதவி இயக்குநர்களாக வந்து சேருபவர்களிடம் 1 மாதம் இலக்கியப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கட்டளையிடுவார்.
இன்று அவருடைய பல சிஷ்யர்கள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்று அழுத்தமாக பதியவைத்தவர். கடைசி வரை எளிமையாக வாழ்ந்த மனிதர். தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுடன், இன்றைய இளைஞர்களிடமிருந்து நவீனத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினார். படைப்பாளிகளைக் கொண்டாடிய அந்த கலைஞன் இயக்கிய கதை நேரம் பலருடைய சிறுகதைகளை இன்று காட்சிப்படுத்தியுள்ளது.
பிரசாத் பிலிம் அகாதெமியில் 1 வாரம் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பயிற்சியை தமுஎகசவினருக்கு பாலுமகேந்திரா வழங்கினார். குறும்படம், ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது,” பேனாக்களை போட்டு விட்டு எப்போது கேமராக்களைத் தூக்கப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நான், இன்று தமுஎகசவில் இருந்து இத்தனை படைப்பாளிகள் உருவாகியிருப்பதைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன் என்றார்.
இந்நிகழ்வில் பாலுமகேந்திரா குறித்து தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீரசா கருத்துரையாற்றினார். பாலுமகேந்திரா சின்னத்திரைக்காக இயக்கிய கதை நேரம் திரையிடப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ந.ஸ்ரீதர், மாவட்டச் செயலர் அ.ந.சாந்தாராம், புறநகர் மாவட்டத்தலைவர் மருதுபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூ.பாண்டிய முத்துக்குமரன் நன்றி கூறினார்.