‘தி இந்து’ நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘இனிது இனிது தேர்வு இனிது’ வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நாளை காலை நடக்கிறது.
பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கடந்த செப்டம்பர் 16-ம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் மேம்பாட்டுக்காக நாளிதழ் வழியாக மட்டுமின்றி நேரடியாக கள அளவிலும் பல நிகழ்ச்சிகளை ‘தி இந்து’ நாளிதழ் நடத்தி வருகிறது.
அந்த வகையில், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிலையில், ‘தி இந்து’ நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் ‘இனிது இனிது தேர்வு இனிது’ வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில், கோவையைச் சேர்ந்த நன்னெறிக் கழகத்தின் தலைவர் ‘இயகோகா’ என்.சுப்பிரமணியம் தன்னம்பிக்கை உரை நிகழ்த்துகிறார். எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராமதாஸ், ஸ்ரீவித்யா கல்வி மையத்தின் கவுரவ இயக்குநர் எஸ்.பி. சுப்பிரமணியன் கலந்துகொள்கின்றனர்.
பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களை எளிதாகப் படிப்பது, தேர்வுக்குத் தயாராவது, முழு மதிப்பெண்களை பெறுவது மற்றும் தேர்வு எழுதும் நுணுக்கங்கள் குறித்து துறைசார்ந்த நிபுணர்கள் பேசுகின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஃபார்முலா புத்தகம், முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான உதவிகளை ‘சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன்’ நிறுவனம், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ நிறுவனம் செய்கின்றன.