சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களின் நியமனம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர் பாக தமிழக அரசு பதி லளிக்க நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:
வெளிப்படைத் தன்மை இல்லை
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு வழக்கறிஞர்களின் நியமனம் தொடர்பான வரைவு விதிகளை முன்னாள் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏ.எல்.சோமயாஜி ஆகியோர் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளனர். இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களின் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கடந்த ஏப்ரல் 29-ல் அறிவிப்பாணை வெளி யிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள் ளது. ஆனால் இந்த அறிவிப்பாணை யில் வெளிப்படைத் தன்மை இல்லை.
அரசு வழக்கறிஞர் பதவி கோரி யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற எந்த விவரமும் இல்லை. குறிப் பிட்ட சிலருக்கு அந்தப் பதவியை வழங்குவதற்காகவே அந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள் ளது. அரசு வழக்கறிஞர்களின் நியமனம் தொடர்பாக உச்ச நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கும், சிறுபான்மை யினர் மற்றும் மகளிருக்கும் அரசு வழக்கறிஞர் பதவியில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
மேலும் சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தலைமை வழக்கறிஞருடன் சேர்த்து மொத்தம் 132 அரசு வழக்கறிஞர்கள் உள்ள னர். இதில் மூன்று பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந் தவர்கள். எனவே அரசு வழக்கறிஞர் பணியில் தாழ்த்தப்பட்டோருக்கு 19 சதவிகிதம் இடஒதுக்கீடு அல்லது மொத்தப் பணியிடங்களில் 25 சத விகிதம் என உரிய பிரதிநிதித்துவம் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப் பாணையை ரத்து செய்து இடைக் கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்யநாரா யணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.பழனிமுத்துவும், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பொதுத்துறை சார்பில் அரசு ப்ளீடர் எம்.கே.சுப்ரமணியனும் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.