தமிழகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்

கி.மகாராஜன்

ஜல்லிக்கட்டுக்காக அதிமுக, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் என்ன செய்தார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை துடைத்து எரிந்துவிட்டு தமிழக மக்கள் பொங்கலை கொண்டாடினால் 50 ஆண்டு அவலம் நீங்கி நல்ல காலம் பிறக்கும்" என்று கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) கூறியதாவது:

"ஜல்லிக்கட்டு பிரச்சினை உருவானது 2011 ஜூலை மாதம். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்ததால், உச்ச நீதிமன்றம் வரை சென்று ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்றனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.

இப்பிரச்சினையை சரிசெய்யும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் நிலை எழுந்தபோது மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் வழக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியாகியுள்ளது. மத்திய அரசின் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் நிலை உள்ளது. அந்த தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது இந்த நேரத்தில் சிலர் புரியாமல் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது என கேட்கின்றனர். சென்ற மாதம் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக எம்.பிக்கள் எங்கே போயிருந்தனர். கடைசி சில நாட்கள் நாடாளுமன்றத்துக்கே அதிமுக எம்பிக்கள் வரவில்லை. அவர்களை நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்தது எது? மற்ற கட்சிகளின் எம்பிக்கள் என்ன செய்தனர்? இப்போது புதிதாக எல்லோருக்கும் ஞானோதயம் வந்ததற்கு என்ன காரணம்.

காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் செய்த துரோகங்களுக்கு அளவே இல்லை. காவிரி, மீனவர்கள், இலங்கை தமிழர்கள், ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை என அனைத்து பிரச்சினைகளுக்கும் பின்னால் காங்கிரஸ், திமுகவுக்கு உள்ளது. ஏதோ ஒரு காலகட்டத்திலும் அதிமுகம் பின்னணியில் இருந்துள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) போகி திருநாள். போகியன்று குப்பைகளை அகற்றி எரித்துவிட்டு பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை துடைத்து எரிந்துவிட்டு தமிழக மக்கள் பொங்கலை கொண்டாடினால் 50 ஆண்டு அவலம் நீங்கி நல்ல காலம் பிறக்கும். ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்கும்"

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT