ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கத்திவாக்கம் சாலையில் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் 2 மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
வடசென்னை பகுதியில் போதிய அளவில் சாலை வசதிகள் இல்லை. ஏற்கெனவே இருக்கும் சாலைகளும் விரிவுபடுத் தப்படாமல் உள்ளன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மத்திய சென்னை யில் இருந்து வடசென்னைக்கு செல்ல 3 முக்கிய சாலைகள் உள்ளன. இதில் கடற்கரை சாலை யும் திருவொற்றியூர் சாலையும் குறுகியதாக இருப்பதாலும் கன்டெய்னர் உள்ளிட்ட கனகர வாகனங்கள் அதிகம் செல்வதா லும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பகுதியில் உள்ள கத்தி வாக்கம் சாலையும் முக்கியமான தாக இருக்கிறது. சுமார் 7 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலை ஆர்.கே.நகர் தொகுதி வழியாக திருவொற்றியூர், மணலியை இணைக்கிறது. ஆனால், இந்த சாலையில் 3 இடங்களில் ரயில்வே கேட் இருக்கிறது. ஒரு இடத்தில் மட்டுமே தற்போது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மற்ற 2 இடங்களில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் பொதுமக்களும் வானக ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட இடங் களுக்கு எளிதாக சென்றுவர முடியும்.
இது தொடர்பாக வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி இட நெருக்கடியான பகுதியாக இருப் பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு கத்திவாக்கம் நெடுஞ்சாலை முக்கியமானதாக இருக்கிறது. இந்த சாலையில் 3 இடங்களில் ரயில்வே கேட் இருந்தது.
மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் மீனம்பாள்நகர் பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டு தற்போது புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நேரு நகர், ஐஓசி தொழிற்சாலை அருகே இருக்கும் ரயில்வே கேட்களை மூட இதுவரை எந்த திட்டமும் தீட்டவில்லை. அந்த வழியாக ஒரு மணி நேரத்துக்கு 2 சரக்கு ரயில்கள் கடந்து செல்வதால் ரயில்வே கேட்கள் மூடப்படுகின்றன.
இதனால் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் சுமார் 40 நிமிடம் வரை தாமதம் ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட 2 இடங்களிலும் சுரங்கப்பாதை அல்லது மேம் பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். சில அமைப்புகளும் போராடி வருகின்றன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கத்திவாக்கம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, மேற்கூறிய 2 இடங்களில் மேம்பாலங் களை கட்டினால் ஆர்.கே.நகர் உட்பட வடசென்னை மக்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கத்திவாக்கம் சாலையில் உள்ள 2 ரயில்வே கேட்களை அகற்றிவிட்டு, மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ரயில்வே மற்றும் மாநகராட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.