தமிழகம்

நிரந்தர ஆதார் மையங்களின் செயல்பாடுகள் மாற்றியமைப்பு: பிப்.13 முதல் அமலாகிறது

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிரந் தர ஆதார் மையங்களின் செயல் பாட்டு வழிமுறைகள் மாற்றியமைக் கப்பட்டுள்ளன. அவை வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர ஆதார் மையங்களை நிர்வகித்து வருகிறது. இந்த மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், கூட்டத்தை நெறிப்படுத்தவும், ஆதார் பதிவு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் பிரத்தியேக அலுவலர்கள் இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதனால் பொதுமக்கள் வசதிக்காக நிரந்தர ஆதார் மையங்கள் காலை 9.45 முதல் மாலை 5.45 வரை செயல்படும். அங்கு ஆதார் உதவி மேசைகள் அமைக்கப்பட்டு, அங்கு ஆதார் உதவி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஆதார் சேர்க்கைக்கு தேவையான படிவங்களைப் பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்குவார்கள். முதலில் வருவோருக்கு முதல் சேவை என்ற அடிப்படையில் வரிசை எண் பொறிக்கப்பட்ட டோக்கன்களை வழங்குவர். பொதுமக்கள் டோக்கனில் உள்ள வரிசை எண்ணுக்கு ஏற்றவாறு, வரிசையில் நின்று சேவைகளைப் பெற வேண்டும். ஆதார் உதவி அலுவலர்கள், பொதுமக்களை நெறிப்படுத்துவார்கள். ஆதார் தொடர்பான மக்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

ஆதார் பதிவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆதார் சேர்க்கை மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், அது குறித்து ஆதார் உதவி அலுவலரிடம் தெரிவிக்கலாம். ஆதார் உதவி அலுவலர்களது பணியில் குறை ஏதும் இருப்பின் அதை, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண் 18004 25291-ல் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்த புதிய வழி முறைகள் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT