தமிழகம்

குமரியில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு: தீவனத்துக்கு வழியின்றி மாடுகளை விற்கும் அவலம் - புதுச்சேரி வைக்கோலை வாங்க போட்டா போட்டி

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாடுகளை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்படும் வைக்கோலை வாங்க விவசாயிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது.

இம்மாவட்டத்தில் கடந்த கும்பப்பூ சாகுபடியின்போது பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. இதனால் 2 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி நடைபெறவில்லை. அதே நேரம், அறுவடை முடிந்ததும் வைக்கோலை கேரளாவில் மாட்டுப் பண்ணைகள் வைத்திருப்போர் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்தனர். இதனால் உள்ளூரில் கால்நடை வளர்ப்போருக்கு வைக்கோல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைக்கோல் தட்டுப்பாடு

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே கறவை மாடுகள் இருப்பதாக கால்நடைத்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவற்றின் தீவனத்துக்கு கூட தற்போது வைக்கோல் கிடைக்கவில்லை. ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைந்து வரும் நிலையில், வைக்கோல் தட்டுப்பாடால் பசு மற்றும் காளை மாடுகளை விற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தட்டுப்பாடு எதிரொலியாக, புதுச்சேரியில் இருந்து லாரிகள் மூலம் வைக்கோல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்க விவசாயிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது.

விற்கும் அவலம்

ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள கண்ணன்புதூரில் மாட்டுப் பண்ணை வைத்துள்ள விவசாயி செல்வராஜ் கூறும்போது, ‘‘கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தான் வைக்கோல் கொண்டு செல்லப்படும். உள்ளூர் தேவைக்கு போக வைக்கோல் அதிக அளவில் மீதம் வரும். ஆனால், தற்போது தேவைக்கு ஏற்ப வைக்கோல் கிடைக்கவில்லை. அரசு தரப்பில், கால்நடை மருத்துவமனை மூலம் மானிய விலையில் சில நாட்கள் மட்டுமே வைக்கோல் வழங்கினர்.

தற்போது புதுச்சேரியில் இருந்து செண்பகராமன்புதூர் உட்பட பல பகுதிகளுக்கு லாரிகளில் வைக்கோல் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி மாடுகளை வளர்த்து வருகிறோம். எனது பண்ணையில்15-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சரிவர இவற்றுக்கு வைக்கோல் வழங்க முடியவில்லை. இதனால் மாடுகளை விற்கும் முடிவுக்கு வந்துவிட்டேன்’’ என்றார் .

ரூ.450-க்கு விற்பனை

புதுச்சேரி, கரையான்புதூரில் இருந்து வைக்கோல் கொண்டு வந்து விற்பனை செய்யும் செந்தில் என்பவர் கூறும்போது, ‘‘ கடந்த ஒரு வாரமாக தினமும் புதுச்சேரியிலிருந்து லாரிகள் மூலம் வைக்கோலை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறோம்.

ஒரு லாரியில் 165 கட்டு வைக்கோல் கொண்டு வரப்படும். ஒரு கட்டு வைக்கோல் ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்கிறோம். தேவை அதிகமிருப்பதால் ஒரு லாரி வைக்கோல் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT