தமிழகம்

நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் மே மாதம் கடைசியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் புழுக்கம் அதிகமாகி வியர்த்துக் கொட்டியது. அதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில், வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெப்பமும் சற்று குறைந்து இருந்தது.

கேரளாவில் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் அதன்காரணமாக தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.

அதனால் தமிழ்நாட்டில் வெப்பம் படிப்படியாக குறையும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி, ஊத்தங்கரையில் தலா 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என்றார்.

ஓகேனக்கலில் 50 மி.மீ., திருப்பத்தூரில் (வேலூர் மாவட்டம்) 40 மி.மீ., ஈரோடு, ஊட்டி, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT