முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைப்ப தாக இருந்த சுகாதாரம், தொழில் துறை திட்ட நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவர் மறைந்த அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற் றார். அவரை ஆட்சிப் பொறுப்பிலும் ஏற்றிவிட வேண்டும் என்பதில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல், அவரது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்த திட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த 25-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளன. இதில், காஞ்சிபுரம் சோலார் செல் தொழிற்சாலை, இருங்காட்டுக் கோட்டை மற்றும் வல்லம் வேடக லில் சிப்காட் தொழிற்பேட்டை டிரக் முனையம், மறைமலை நகரில் மகேந்திரா ஆய்வு மையம் ஆகிய வற்றின் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தன.
இது தவிர ஸ்ரீபெரும்புதூர் ஏற்றுமதி பூங்கா, பொன்னேரியில் தொழிற்பூங்கா, காஞ்சிபுரத்தில் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவ தாக இருந்தது. இது தவிர, ஜப்பான் பன்னாட்டு நிறுவன நிதியுதவியுடன் சுகாதாரம் உள்ளிட்ட சில துறை களில் செயல்படுத்தப்படும் திட்டங் களையும் அவர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் தான் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
வழக்கமாக ஜெயலலிதா முதல் வராக இருக்கும் போது காணொலி காட்சி மூலம் திட்ட தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடக்கும்.
ஆனால், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா பயன்படுத் திய அறையை இன்னும் பயன் படுத்தவில்லை. எனவே, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால், ஆந்திரா செல்ல வேண்டி யிருப்பதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. விரைவில் வேறு ஒரு நாளில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் தொடங்கி வைப்பார். முதல்வராக சசிகலா விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுவதால், இதற் காக கூட திட்டங்கள் நிறுத்தி வைக் கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.