புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலில், திங்கள்கிழமை மக்கள் வருவதற்கு முன்னதாகவே குடமுழுக்கை நடத்தியதாக சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலை புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து திருப்பணி மேற்கொள்ள ரூ. 25 லட்சம் கிடைக்க அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பரிந்துரை செய்தாராம். இதையடுத்து, குடமுழுக்கு நிகழ்வுக்கு அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குடமுழுக்கு நடை பெற்றது. பக்தர்கள் கூடுவதற்கு முன்னதாகவே குடமுழுக்கு நடத்தியதாக கோயிலின் தலைமை சிவாச்சாரியார் கண்ணப்பனை பணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ஞானசேகரன் உத்தரவிட்டார். குடமுழுக்கு நடத்தியதற்காக சிவாச்சாரியார் தண்டிக்கப்பட்ட சம்பவம் பக்தர்க ளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னணி என்ன?
திமுக மாவட்டச் செயலர் பெரியண்ணன்அரசு, திமுக மாவட்டப் பொருளாளர் கே.பி.கே. தங்கவேலு ஆகியோர் இந்தக் கோயில் திருப்பணிக் குழுவின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களும், மேலும் சிலரும் குடமுழுக்கைக் காண கோயிலின் மேல் பகுதியில் நின்றிருந்தனர். அப்போது, அவர்கள் வானில் கருடன் வட்டமிடுவதாலும், உரிய நேரம் வந்துவிட்டதாலும் புனிதநீரை ஊற்றுமாறு சிவாச் சாரியார்களைக் கேட்டுக் கொண்டனராம்.
ஆனால், அங்கிருந்த அதிமுகவினரோ அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்துகொண்டிருப்பதால் சற்று நேரம் தாமதித்து அவர் வந்த பிறகு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றனராம். இதனால், சிறிது நேரம் தடுமாறிய சிவாச்சாரியார் ஒருவழியாக நல்ல நேரம் கருதி குடமுழுக்கை நடத்தி முடித்தார்.
குடமுழுக்கு முடிந்து சில நிமிஷங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோயிலுக்கு வந்தார். அவரிடம் கோயிலில் நடந்த அனைத்து விஷயங்களையும் அதிமுகவினர் கூறினர். அதன் பின்னணியில்தான் சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.