இளம் வட்டாட்சியர் உயிரிழப்புக்குக் காரணமான மாவட்ட வருவாய் அலுவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட வருவாய்த்துறை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
சென்னை மாவட்டத்தின் பெரம் பூர் வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக எஸ்.மதன்பிரபு (38) இருந்துவந்தார். இவர், தண்டையார் பேட்டை வட்டத்தின் சமூகப் பாது காப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பொறுப்பு வகித்துவந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நள் ளிரவு, ஓய்வூதியம் சார்ந்த பணி களை மேற்கொண்டபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
போதிய பணியாளர்களை நிய மிக்காமல், அதிக பணிச்சுமை வழங் கியதால்தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறி, மாவட்ட வருவாய் அலுவலர் அழகு மீனாவை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி, வருவாய்த்துறைப் பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அனை வரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி, கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இது தொடர்பாக வட்டாட்சியர் கள் கே.சி.ராம்குமார், டி.முரளி, துணை வட்டாட்சியர் சி.கே.குமரன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பெரம்பூர் தனி வட்டாட்சியர் எஸ்.மதன்பிரபு, கடும் பணிச் சுமையால், நள்ளிரவில் பணி கட்டாயப்படுத்தப்பட்டதால், அந்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இவருக்கு போதிய உதவியாளர்களை வழங்க வேண்டும் என்று 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் அழகு மீனாவிடம் கடிதம் கொடுத்து இருந்தோம். இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் கொடுத்த அழுத்தம், இரவு 1 மணி வரை பணி செய்ய வைத்தது, கடும் பணிச் சுமை காரணமாகத்தான் அவர் 38 வயதில் மாரடைப்பால் இறந்துள்ளார்.
அவரது மரணத்துக்கு காரண மான மாவட்ட வருவாய் அலுவலர் அழகு மீனா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இறந்த வட்டாட்சியர் மதன் பிரபுவுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்கவேண்டும். அவரது மனைவிக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி, நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக் கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.