ரயிலில் தவறவிட்ட 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.24 லட்சத்தை பத்திரமாக மீட்டு, உரியவரிடம் நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கேரள மாநிலம், ஆலப்புழா அடுத்த கட்டசேரா பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் விஜயன் (60). அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, காயங்குளம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை வரை செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் குடும்பத்தாருடன் விஜயன் புறப்பட்டார்.
இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது. அப்போது ரயிலில் இருந்து இறங்கிய விஜயன், உடமைகளை சரிபார்த்தார். 5 நிமிடங்கள் நின்ற ரயில் அங்கிருந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. அப்போது, அவர் கொண்டு வந்த ஒரு கைப்பை மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. உடனே, சேலம் ரயில்வே போலீஸில் விஜயன் புகார் செய்தார்.
சேலம் போலீஸார் உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். அடுத்த சில நிமிடங்களில் திருவனந்தபுரம் ரயில் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அந்த ரயிலில் போலீஸார் சோதனையிட்டபோது, விஜயன் அமர்ந்திருந்த பெட்டியில் அவரது கைப்பை அப்படியே இருந்தது.
இதையடுத்து, போலீஸார் அந்த கைப்பையை மீட்டு சோதனையிட்டபோது, அதில் 11 பவுனில் 9 வளையல்கள், 4 பவுனில் தங்கச்செயின், 5 பவுனில் நெக்லஸ், 4 பவுனில் 15 மோதிரம், 2 பவுனில் தோடு என மொத்தம் 26 பவுன் தங்க நகைகளும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 600 ரூபாய் பணமும், 2 செல்போன்கள், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணைக்குப் பிறகு, நகைகளையும் பணத்தையும் விஜயனிடம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.