தூத்துக்குடி மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதிப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை நிலவரப்படி 106 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் ஆண் குழந்தைகள் 15 பேர், பெண் குழந்தைகள் 7, வயதான பெண்கள் 4 பேர். மாநகர பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச் சலால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களப்பணியாளர் நியமனம்
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார் கூறும் போது, “தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 225 டெங்கு தடுப்பு களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணிகளை கண்காணிக்க 4 சுகாதார அலுவலர்கள் நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் கூட்டு துப்புரவு, கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துதல், வீடுகளில் புகை மருந்து அடித்தல், அபேட் கொசு மருந்து தெளித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. காயச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள லெவிஞ்சிபுரம், பிரையண்ட் நகர், அண்ணா நகர், டூவிபுரம், மட்டக்கடை பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
வீடு வீடாக ஆய்வு
டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சலால் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா எனக் கணக்கெடுத்து வருகின்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களை சுத்தமாக வைக்க வேண்டும். அவற்றை வாரத்தில் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து ஒரு நாள் முழுமையாக காய வைத்து, அதன் பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும். கொசு புழுக்கள் உள்ளே புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
ஒத்துழைப்பு தேவை
வீடுகளில் அடியில் இருக்கும் தொட்டி மற்றும் மாடியில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவை மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்களின் பின்புறம் இருக்கும் டிரேயில் வாரம் ஒரு நாள் தண்ணீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு முழு உடலையும் மறைக்கும் வகையில் ஆடை அணிவிக்க வேண்டும். டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார் அவர்.