தமிழகம்

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வள்ளியூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியின்போது, மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டி, இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றன.

கமல்ஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டம் பழவூரை சேர்ந்தவரும், அங்குள்ள நாறும்பூநாதசுவாமி கோயில் பக்தர்கள் நலச்சங்க செயலாளருமான வை.ஆதிநாதசுந்தரம் என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘கடந்த 12-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்த போது, இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி அவதூறாக பேசியிருக்கிறார். எனவே, அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதித்துறை நடுவர் செந்தில்குமார், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பழவூர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT