தமிழகம்

இலங்கைப் பிரச்சினை: கருணாநிதி, சிதம்பரம் மீது வைகோ சாடல்

செய்திப்பிரிவு

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் மக்களை ஏமாற்றி வருவதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ சாடியுள்ளார்.

சேலம் காந்திரோட்டில் உள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் மர்ம நபர்கள் கோணிபையில் பெட்ரோல் நினைத்து எரியூட்டி வீசி சென்றனர். இந்த வழக்கில் அஸ்தம்பட்டி காவல் அதிகாரிகள் திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்துார் மணி உள்பட நான்கு பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழக அரசு மீது தாக்கு

சிறையில் உள்ள கொளத்துார் மணியை இன்று சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ,

"தமிழகத்தை ஆட்சி செய்யும் அ.தி.மு.க., அரசு ஏதேச்சிகார போக்கை கட்டவிழ்த்து, கருத்து சுதந்திரம் பறித்து, கொளத்துார் மணி மீது பொய் வழக்கு போட்டுள்ளது.

காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில், வணிவரித்துறை அலுவலகத்தில் சாக்குப்பையில் பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில், யார் பெயரையும் சேர்த்தா நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது அ.தி.மு.க., அரசின் அராஜக அடக்குமுறை ஆட்சியை வெளிக்காட்டுகிறது.

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் நடத்தப்பட வேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம், ஏற்கனவே, அவர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு முரண்பாடாக உள்ளது. தமிழீழ மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை கிடையாது. சிங்கள ராணுவத்தால், இலங்கை தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை கண்டித்து, முத்துக்குமார் உள்ளிட்ட 11 பேர் தீக்குளித்து மாண்டனர். இதற்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஒரு இரங்கள் அறிக்கை கூட வெளியிடவில்லை.

கோமாவில் இருந்தாரா சிதம்பரம்?

இசைப்பிரியா சிங்கள ராணுவத்தால் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்த ஒளி நாடாவை, குறுந்தகட்டில் பதிவு செய்து கல்லுாரி மாணவர்கள் அறிய செய்தேன். இந்த ஒளி நாடா உண்மையெனில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு முதல் இலங்கை ராணுவத்தால், தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவது, ப.சிதம்பரத்துக்கு தெரியாதா? அப்போதெல்லாம் அவர் கோமா நிலையில் இருந்தாரா?

தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒன்பது ஈழ தமிழர்களை சுட்டுக்கொன்ற காட்சி படத்தை பார்த்து, பத்திரிக்கையாளர்களிடம் 'இது பழைய படம் போல உள்ளது' என கிண்டல் செய்தார். இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது. அந்த நாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தான், நைஜீரியா, உகாண்டா, ஃபிஜித் தீவு ஆகிய நாடுகளை நீக்கியது போன்று, இலங்கையையும் நீக்கிட வேண்டும். இலங்கையில் மீண்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலர வேண்டும்" என்றார் வைகோ

இடைத்தேர்தல் குறித்து பேச மறுப்பு

ஏற்காடு இடைத்தேர்தல் சம்பந்தமாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், இனி எதுவும் பேச முடியாது என்று கூறி, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT