தமிழகம்

பிப்.2-ல் தேமுதிக கூட்டணி முடிவு அறிவிப்பேன்: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவுள்ள தேமுதிக மாநாட்டில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேசும்போது, "எந்தக் கட்சியிலும் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியாது. ஆனால், தேமுதிகவில் தான் ஆரோக்கியமான போட்டியை பார்க்க முடியும்.

என்னையும், தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது. யார் அரசை ஆளப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். எனக்கு எந்த ஜாதியும், மதமும் கிடையாது. எல்லோரும் ஒன்று தான்.

ஊழலை ஒழிக்க முன்னோடியாக திகழ்பவன் நான். தமிழ்நாட்டில் போதிய சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் அரசு செய்து கொடுக்க வில்லை. தமிழக விவசாயிகளும் நிலையும் மோசமாகி வருகிறது. மின்தடையும் அதிகமாக இருக்கிறது.

கடந்த 1998 முதல் 2008 வரையில் மின்உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் இல்லை. எனக்கு பயம் ஏதும் கிடையாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம் இருக்கும்.

இடைத்தேர்தலில் மக்களிடம் காசு கொடுத்தால் ஓட்டு போடுவார்கள். ஆனால், பொதுதேர்தலில் காசு கொடுத்து விட்டால், ஓட்டு போடுவார்கள் என நினைக்காதீர்கள். இலவசத்திற்காக செலவிடும் நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடுங்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு புதிய வியூகம் வகுத்திருக்கிறேன். உளுந்தூர்பேட்டியில் வரும் பிப்ரவரி 2-ம் தேதியில் நடக்கவுள்ள தே.மு.தி.க மாநாட்டில் கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து முடிவை அறிப்பேன்.

நான் பொறுமையாக இருக்கிறேன். பம்பரமாக சுயன்று வேலை பார்க்கும் போது, மற்றவர்கள் என்னை தேடி வருவார்கள்.

முன்னதாக, பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான தொண்டர்கள் நடனம் ஆடி, பாடி மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தே.மு.தி.க கொறடா சந்திரக்குமார் உட்பட கட்சியின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்ட ஏழைகளுக்கு புத்தரிசி, முந்திரிபருப்பு, கரும்பு, மஞ்சள், நெய், வெள்ளம் ஆகிய பொருட்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT