தமிழகம்

அடுத்தடுத்து 2 பெண்கள் உயிரிழப்பு: குடியாத்தத்தில் மேலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல்?

செய்திப்பிரிவு

வீடு வீடாக மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு

நெல்லூர்பேட்டையில் மர்மக் காய்ச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, வீடு வீடாக மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 பேர் கேரள மாநிலம் குருவாயூர் சென்றபோது, அனைவரும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர்.

கடந்த 23-ம் தேதி அனை வரும் ஊர் திரும்பினர். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாகம்மாள் (48), கடந்த 3 தினங்களுக்கு முன்பு மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நேற்று முன்தினம் நாகம்மாள் உயிரிழந்தார். இதேபோல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த விஜயா (48) என்பவரும் உயிரிழந்தார்.

ஒரே பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், சுற்றுலா சென்று திரும்பிய பலரும் காய்ச்சல் காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் பரவியது.

இதையடுத்து, திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் தேவ பார்த்தசாரதி தலைமையிலான 3 மருத்துவக் குழுவினர் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் வீடு வீடாக சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பன்றிக் காய்ச்சலால் நாகம் மாள், விஜயா ஆகியோர் இறந்த தாக சுகாதாரத் துறையினர் தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில், நெல்லூர்பேட்டை சிவகாமியம்மன் 2-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (43) என்பவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சல் காரணமாக, வேலூர் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது, நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, நெல்லூர் பேட்டை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகளை குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயந்தி, குடியாத்தம் வட்டாட்சியர் நெடுமாறன், நகராட்சி ஆணையாளர் செந்தில்வேல் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT