தமிழகம்

ஆட்சியை கலைத்துவிட்டு பண பேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

செய்திப்பிரிவு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கலைத்துவிட்டு எம்எல்ஏ.க்கள் பண பேர விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுத்து அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டடனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கைதாகினர்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கலைத்துவிட்டு பண பேர விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 18-02-2016 அன்று இதே சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக, இந்த வாக்கெடுப்புக்கு குதிரை பேரம் நடந்து இருக்கிறது, ஏறக்குறைய 14 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைதிகளை போல அடைத்து வைத்திருந்து, பிறகு தான் சட்டமன்றத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். எனவே, அவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், என்று நாங்கள் போராடினோம். ஆனால், அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தாரே தவிர, எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை.

சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு, காவல்துறையை அவைக்குள் வரவழைத்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் அடித்து, உதைத்து, வெளியில் கொண்டு போய் வீசினார்கள். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அவர்களே அறிவித்துக் கொண்டார்கள்.

தற்போது கடந்த இரு நாட்களாக ’டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கில தொலைக்காட்சியில், கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில் யார் யாருக்கெல்லாம், பல கோடி ரூபாய்கள் பேரம் பேசப்பட்டது என்பதை அதிமுகவை சார்ந்து இருக்கக்கூடிய, அவர் ஓ.பன்னீர்செல்வம் அணியா, எடப்பாடி பழனிசாமி அணியா என்ற பிரச்னைக்குள் கூட நான் செல்ல விரும்பவில்லை, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாக இப்போதும் அவையில் இருக்கக்கூடிய, கனகராஜ் மற்றும் சரவணன் என்ற இருவரின் பேட்டியை, அந்த தொலைக்காட்சி பதிவு செய்து, இரு நாட்களாக வெளியிட்டு வருகிறது.

அதில், யார் யாருக்கெல்லாம் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே தெரிவித்து இருக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ., சரவணன், “அதில் பேசியிருப்பது நான் இல்லை”, என்று காலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கிறார். ஆனால், மாலையில், ’அது நான் தான்’, என்று ஒப்புகொண்டு, ’ஆனால் என் குரல் அல்ல’, என்றும் தெரிவித்து இருக்கிறார். ’போட்டு இருக்கும் சட்டை என்னுடையது, ஆனால் அது நானில்லை’, என்று திரைப்படங்களில் வரும் காமெடி சீன் போல, அவர் பேட்டி தந்திருக்கிறார்.

ஆகவே, இந்தப் பிரச்னையை இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் எழுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட இரு சட்டமன்ற உறுப்பினர்களும் பதிலளிக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் குதிரை பேரத்தின் அடிப்படையில் தான் இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்று இருக்கிறது என்பதை, அதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.

எனவே, இந்த ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும், ராஜினாமா செய்ய வேண்டும், கவிழ்க்கப்பட வேண்டும், ஆகவே, அந்த நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், எங்கெங்கு பணம் பேரம் பேசப்பட்டு, வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறித்து, அரசே முன் வந்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும், என்று எடுத்துச் சொல்லும் வகையில் தான் இந்தப் பிரச்னையை நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி எழுப்ப முயற்சித்தோம்.

ஆனால், அவர்கள் நான் பேசுவதற்கு திட்டவட்டமாக அனுமதி மறுத்தனர். தொடர்ந்து நாங்கள் குரலெழுப்பிப் போராடியும் அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், சபாநாயகர் அவர்கள் எங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கின்றார். அதன்படி நாங்கள் வெளியேற்றப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சர்வாதிகாரத்தோடு இந்த ஆட்சி நடப்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என்றார்.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலேயே விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று சபாநாயகர் தெரிவிக்கிறாரே? என்ற கேள்விக்கு

"நான் வாதத்துக்காக அதை ஏற்கிறேன். ஆனால், காவேரி பிரச்னை, முல்லைபெரியாறு, நீட் பிரச்னை என பல பிரச்னைகளும் நீதிமன்றத்தில் உள்ளன. நீட் பிரச்னை நீதிமன்றத்தில் இருந்த நேரத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாங்களும் அதற்கு

ஏகமனதாக வரவேற்பு தந்திருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இதுகுறித்து நாங்களே நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். டைம்ஸ் நவ் செய்தியில் வந்த பிறகு நான் வழக்கு தொடர்ந்தேன். ஏற்கனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அந்த வழக்கு வரும் ஜூலை மாதம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, டைம்ஸ் நவ் செய்தி வந்த பிறகு தொடரப்பட்ட வழக்கில், அந்த வழக்கையும் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.

உரிய ஆதாரங்களை அளித்தால் அனுமதிப்பேன் என்று சபாநாயகர் தெரிவித்து உள்ளாரே? என செய்தியாளர் கேள்வி எழுப்ப, "இதில் ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நாட்டுக்கே அனைத்தும் தெரிந்தவைதான். உலகம் முழுவதும் அந்த செய்தி பரவி, அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்" என ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT