தமிழகம்

திருப்பூர்: தேர்தல் வருது... அப்புறம் பாத்துக்கலாம்- இது அதிகாரிகள் வாக்குறுதி?

இரா.கார்த்திகேயன்

அரசு மருத்துவமனையில் செய்து கொண்ட சிகிச்சையால், முடங்கிப்போனேன். இப்போது குடும்பத்தை கவனிக்க முடியாத நிலையில் தவிக்கிறேன் என்று கூறுகிறார் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் பால்பாண்டி.

இவர், மனைவியுடன் வந்து, திருப்பூர் ஆட்சியரிடம் நிவாரண உதவி கேட்டு 2-வது முறையாக திங்கள்கிழமை மனு கொடுத்தார்.

கடந்த மாதம் 24ம் தேதி, 4 பேர் சுமந்து வர, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுதுள்ளார். அப்போது, மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் திங்கள்கிழமை மனு அளிக்க திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பால்பாண்டி, சுமார் 2 மணி நேரம் காத்திருந்து ஆட்சியரை சந்தித்து தன் பிரச்சினைகளைக் கூறி மனு அளித்தார்.

நம்மிடம் பால்பாண்டி கூறியது:

திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் கோயில் வீதியில் வசிக்கிறேன். மனைவி, 2 மகள்கள், மகன் உள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்து முதுகுத்தண்டில் அடிபட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

சில வாரங்களில், சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் கடும் வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அறுவைச்சிகிச்சையால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

கடந்த 10 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளேன். உரிய நஷ்டஈடு கிடைக்கலைன்னா கூட பரவாயில்லை. உதவித் தொகையாவது கொடுத்து உதவலாம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றார்.

அவரது மனைவி தெய்வானை கூறியது:

கடந்த திங்கள்கிழமை மனு அளித்தோம். இந்த 7 நாளில் ரொம்பவே அலைக்கழிச்சுட்டாங்க. கடந்த செவ்வாய்க்கிழமை, திருப்பூர் தாலுகா ஆபீஸ் போய் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு மனு கொடுத்தோம். பழவஞ்சிப்பாளையம் தாலுகா அலுவலகத்திற்கு போகச் சொன்னார்கள். புதன்கிழமை போய் கேட்டதற்கு வெள்ளிக்கிழமை வாங்கன்னு சொன்னாங்க. வெள்ளிக்கிழமை போனால், இப்போது ஒன்றும் செய்ய முடியாது,. தேர்தல் வருது, 3 மாதம் கழித்து வாங்க பாத்துக்கலாம் எனச் சொல்லி அனுப்பிட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம மீண்டும் மனு அளித்தோம் என்றார் வேதனையுடன்.

திருப்பூர் ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி பால்பாண்டி மனு மீது நடவடிக்கை எடுப்பாரா? பசியோடு காத்திருக்கின்றன 5 உயிர்கள்.

'முழுமையாக குணமடைய வாய்ப்பு குறைவு'

பால்பாண்டிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான மருத்துவச் சான்றுகளை காண்பித்து அரசு மருத்துவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டோம்.

சிகிச்சை சரியாக இருக்கிறது. ஆனால், இது போன்ற முதுகுத் தண்டுவட அறுவைச்சிகிச்சைகளில் டெக்னிக்கல் தவறு இருக்க வாய்ப்பு இருக்கலாம். அப்படியொரு வாய்ப்பு இதில் இருப்பதாகத் தெரிகிறது.

முதுக்குத்தண்டுவட அறுவைச் சிகிச்சையில், இன்னும் அமெரிக்காவே பின்னோக்கிதான் உள்ளது. இது போன்ற அறுவைச்சிகிச் சைகளில் 100 விழுக்காடு முழுமையான வெற்றி கிடைக்கும் என்று சொல்லமுடியாது.

முதுகில் அடிபட்டநேரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் என எல்லா விஷயங்களுமே என அவரது உடல் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது. முதுகுத் தண்டுவட சிகிச்சை எடுப்பதில், அரிதாக சிலர்தான், சகஜ நிலைக்குத் திரும்புகின்றனர். பலர் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பழைய நிலை திரும்புவதில் சிக்கல் தொடர்ந்து இருக்கிறது.

அதேபோல், பால்பாண்டியால் திரும்ப எழுந்து நடப்பார் என்றும் சொல்லமுடியாது. அரசு நிர்வாகம் அவருக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்கலாம் என்றார் மனிதாபிமானத்தோடு.

SCROLL FOR NEXT