தமிழகம்

திமுகவின் போராட்டத்தில் திரையுலகினர் திரள ஏ.எல்.அழகப்பன் அழைப்பு

ஸ்கிரீனன்

திமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஏ.எல்.அழகப்பன் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து, புதன்கிழமை திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் திரையுலகினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏ.எல்.அழகப்பன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "22-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத அறப்போர், ஜனநாயகம் காக்கும் போர். இந்த அறப்போரை திமுக முன்னின்று நடத்தினாலும் இது தமிழக மக்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்தப்படும் எழுச்சிப்போர்.

இந்த அறப்போரை வலுவாக்க திரண்டிடுவீர். இந்த அறவழி அறப்போர் மக்கள் சக்தியின் மாபெரும் வெளிப்பாடாக கட்சி மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட்ட உணர்வோடு கூடிடுவீர்.

இந்தப் போராட்டத்தில் கலையுலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டு, நமது உணர்வுகளை தெரியப்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறேன்" என்று அழகப்பன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT