தமிழகம்

சென்னை மாரத்தானில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: ஆண்கள் பிரிவில் கென்ய வீரருக்கு முதல் பரிசு

செய்திப்பிரிவு

சென்னை மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான பிரிவில் கென்ய வீரர் முதல் பரிசை வென்றார். பெண்கள் பிரிவில் மும்பை வீராங்கனை முதலிடம் பிடித்தார்.

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் ‘தி விப்ரோ மாரத்தான்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் சென்னை மராத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை முன்னிட்டு இப்போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் விப்ரோ - சென்னை மாரத்தான் ஓட்டம் நேற்று காலை நடத்தப்பட்டது. முழு மாரத்தான் (42.2 கிலோ மீட்டர்), அரை மாரத்தான் (21.1 கி.மீ) மற்றும் 10 கிலோ மீட்டர் தூர ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முழு மாரத்தான் அதிகாலை 4 மணிக்கும், அரை மாரத்தான் அதிகாலை 5 மணிக்கும் மத்திய கைலாஷ் அருகே உள்ள கஸ்துர்பா நகர் எம்.ஆர்.டி.எஸ். ஸ்டேஷன் பகுதியில் இருந்து தொடங்கின. 10 கிலோ மீட்டர் தூர ஓட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த 3 பந்தயங்களும் தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்தன. முழு மாரத்தான், அரை மாரத்தான், 10 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முழு மாரத்தான் போட்டியில் கென்யாவை சேர்ந்த ஐசக் கெம்போய் முதலிடத்தைப் பிடித்தார். இதே பிரிவில் பெண்கள் பிரிவில் மும்பையைச் சேர்ந்த சிம்தா சர்மா முதல் பரிசை பெற்றார்.

முன்னதாக முழு மராத்தான் போட்டியை விப்ரோ நிறுவன அதிகாரி பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரை மராத்தானை அந்நிறுவனத்தின் பொது மேலாளர் கே.பாண்டு ரங்காவும், 10 கிலோ மீட்டர் போட்டியை மாரத்தான் இயக்குநர் தீபா பரத்குமாரும் தொடங்கி வைத்தனர். போட்டி நடைபெற்றதைத் தொடர்ந்து காலை 4 மணி முதல் 10 மணிவரை டைடல் பார்க்கில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.17.20 லட்சமாகும். முழு மாரத்தானில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.1.25 லட்சம், ரூ.80 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டன.

அரை மாரத்தானில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டன. 10 கிலோ மீட்டர் பிரிவில் வென்றவர்களுக்கு முறையே ரூ.35 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டன. இதேபோல் முதியோர் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT