தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் நீக்கம் தொடர்கிறது: ராதாபுரம், வள்ளியூர், பணகுடி வட்டாரங்களில் பரபரப்பு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். முக்கிய நிர்வாகிகள் நீக்கத்துக்கு அதிமுக வட்டாரத்தில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முத்துக்கருப்பன் எம்.பி., இளைஞர் பாசறை செயலாளராக இருந்த ஹரிஹரசிவசங்கர், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் முருகையாபாண்டியன் எம்எல்ஏ ஆகியோர், சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பிரபாகரன் நியமனம்

இம்மாத தொடக்கத்தில், சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளர்களாக கூறப்படும் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளராக இருந்த ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பணகுடி பேரூராட்சி செயலாளராக இருந்த பேரூராட்சி தலைவர் லாரன்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

முருகையாபாண்டியன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டபின், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவரும், அதிமுக அமைப்பு செயலாளருமாக இருந்த பா.நாராயணபெருமாள் புறநகர் மாவட்டச் செயலாளரானார். நேற்று அவரும் நீக்கப்பட்டு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகிகள் மீது புகார்

இதுபோல் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ஜெயினுலாப்தீன், மீனவரணி செயலாளர் ஆ.ராஜா என்ற அந்தோணி அமலராஜா ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் டி.பால்துரை, புறநகர் மீனவர் பிரிவு செயலாளராக ஜெ.அகிலன், ராதாபுரம் ஒன்றிய செயலாளராக எம்.ராஜா என்ற அந்தோணி அமலராஜா, பணகுடி பேரூர் செயலாளராக ஜெயினுலாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், வள்ளியூர், பணகுடி வட்டாரங்களில் அதிமுக நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றிக்கு இவர்கள் சரிவர களப்பணியாற்றவில்லை என்பது குற்றச்சாட்டாக சொல்லப்படுகிறது. 49 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே இன்பதுரை வெற்றிபெற்றிருக்கிறார். எனவே, இவர்கள் மீது கட்சி தலைமையிடம் இன்பதுரை புகார்களை தெரிவித்திருந்தார்.

சென்னையில் முகாம்

மேலும், கட்சியில் இருந்து ஜெகதீஸ் நீக்கப்பட்ட பின்னரும், மீண்டும் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாகவே ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் பலருடன் சென்னையில் அவர் முகாமிட்டுள்ளார். இதன் பின்னணியில் நாராயணபெருமாள் இருந்ததாக தெரியவந்ததுதான் அவரது மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பால்துரைக்கு பொறுப்பு

சட்டப்பேரவை தேர்தலின்போது ராதாபுரம் தொகுதியில் முதலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பணகுடி பேரூராட்சி தலைவர் லாரன்ஸ் மாற்றப்பட்டபின் வேட்பாளராக அறிவிக்க, முதலில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர் ராதாபுரம் தொகுதி அதிமுக செயலாளர் பால்துரை. ஆனால் அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் தொகுதியில் தேர்தல் பணியை சிறப்பாக செய்ததற்காக அவருக்கு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT