தமிழகம்

வறட்சியால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்தது: கவலையில் சுற்றுலாப் பயணிகள்

செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் அருவிக்கு விடுமுறை நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள்.

கோவையிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அமைந்துள்ள இந்த அருவியைச் சுற்றிலும் பல்வேறு விலங்குகள் நடமாட்டம் இருக்கும்.

அருவி கொட்டும் இடத்துக்கு 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாடிவயல் பகுதியில் போளுவாம்பட்டி வனச் சரகத்தினர் சோதனைச்சாவடி அமைத்து, இங்கு வருவோரை சோதனையிடுகின்றனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோதனைச் சாவடியிலிருந்து வனத் துறை வாகனங்களில் மக்களை அழைத்துச் செல்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள், பாலித் தீன் பைகள், மது பாட்டில்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி, சோப்பு, ஷேம்பு உள்ளிட்டவை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் மூலம் நெல்லி, வாழைப்பழம், மாங்காய் போன்றவை இங்கு விற்கப்படுகின்றன. அருவிக்கு அரைகிலோமீட்டர் முன்பே மக்கள் இறக்கிவிடப்படுகின்றனர். அங்கிருந்து கரடுமுரடான பாதையில் நடந்துசெல்ல வேண்டும்.

மலையிலிருந்து கொட்டும் அருவி சிற்றோடையாக உருவெடுத்து வனத்துக்குள் செல்கிறது. இந்த ஓடை சீங்கம்பதி, சாடியாத்தாபாறை ஓடைகளுடன் இணைந்து சாடிவயலில் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. பொதுவாகவே இப்பகுதி பசுமைமிகுந்து காணப்படும்.

அருவிக்குச் செல்லும் வழியில் தேக்கு, ஆல், அத்தி, சந்தன மரங்கள் உள்ளன. தற்போது வறட்சி யால் இவை காய்ந்த நிலையில் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காக இங்கு அமைக் கப்பட்டுள்ள மரப்பால நடைபாதை களும் பழுதடைந்துள்ளன. அருவியில் குறைந்த அளவு தண்ணீரே வருகிறது.

வனத் துறையினர் கூறும்போது, “வழக்கமாக இந்த காலகட்டத்தில் தற்போதுபோல 3 மடங்கு தண்ணீர் வரும். கடும் வறட்சியால் நீர்வரத்து மிகவும் குறைந்துவிட்டது. கடந்த வாரம் 2 நாட்கள் பெய்த மழையால்தான் இந்த அளவுக்காவது தண்ணீர் வருகிறது. எனினும், தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் அருவியில் முற்றிலும் நீர்வரத்து குறைந்துவிடும். அப்போது கோவை குற்றாலம் மூடப்படலாம்.

வறட்சியின்போது காட்டுத்தீ ஏற்படலாம் என்பதாலும், மழைக் காலங்களில் அருவியில் அதிக அளவு வெள்ளம் வரும்போதும் சில வாரங்கள் இந்தப் பகுதி மூடப்படும். தற்போது, கடும் வறட்சியால் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. ஏற் கெனவே இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் யானையால் தாக்கப் பட்டு இறந்துள்ளனர். தற்போது கோடை விடுமுறைக்கு முன்னரே கோவை குற்றாலம் மூடப்படவும் வாய்ப்புள்ளது” என்றனர்.

போளுவாம்பட்டி வனச் சரகர் தினேஷ்குமார் கூறும்போது, “வழக் கத்தைவிட அருவிப் பகுதியில் வறட்சி நிலவுவது உண்மைதான். எனினும், அண்மையில் பெய்த மழையால் வனத்தில் சிறிது பசுமை ஏற்பட்டுள்ளது. வறட்சி சூழலைக் கருத்தில்கொண்டு, 4 இடங்களில் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு தீ தடுப்புக் கோடுகள் அமைத்துள் ளோம். இது வனத்தீயை பரவாமல் தடுக்கும். விலங்குகளுக்காக வனத்தில் உள்ள 7 தொட்டிகளில் காலை, மாலையில் தண்ணீர் நிரப்புகிறோம்.

கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சிக்கு வரும் ஏராளமான ஓடை கள் முற்றிலும் வறண்டுவிட்டாலும், பிரதான ஓடையில் தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அது வறண்டாலும்கூட, இங்கு இயற்கை எழிலைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். எனவே, கோவை குற்றாலம் அருவிக்குச் செல்லும் வழியை மூடும் எண்ணம் எதுவுமில்லை” என்றார்.

SCROLL FOR NEXT