கோவையில் உள்ள யோகா மையம் ஒன்றில் தங்கியுள்ள தங்களது இரு மகள்களை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால், தாங்கள் அந்த யோகா மையத்திலேயே, சுய விருப்பத்தின் பேரில் இருக்க விரும்புவதாக, போலீஸில் ஆஜராகி சம்பந்தப்பட்ட பெண்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை வடவள்ளி ஓம் கணேஷ் வீதியைச் சேர்ந்தவர் ச.காமராஜ் (61). ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர், கடந்த 1-ம் தேதி, மாவட்ட ஆட்சியரிடம் யோகா மையம் மீது புகார் மனு அளித்தார். அதில், 'கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள யோகா மையம் ஒன்றுக்கு சென்ற தனது மகள்கள் கீதா காமராஜ் (33), லதா காமராஜ் (31) ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து திரும்பி வரவில்லை. அவர்களது பெயர்களும் மா மதி, மா மாயு என மாற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டு, சாமியார் உடை அணிவிக்கப்பட்டுள்ளது. மகள்களை பார்த்து பேசக் கூட அந்த மையத்தினர் அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ வேண்டிய அவர்கள் சன்னியாசிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் பரிந்துரைத்தார். இதன்பேரில், பேரூர் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட இரு பெண்களுமே, காவல் கண்காணிப்பாளரின் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதில், 'சுய விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக வாழ வேண்டி, யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தங்கி உள்ளோம். ஆனால், மையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பெற்றோர் செயல்படுகின்றனர். அமைதியாகவும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கும் பெற்றோரிடம் இருந்தும், அவர்களை தூண்டி விடுபவர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஈஷா யோகா மையம் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக தமிழக அரசு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெண்ணின் பெற்றோர் இணைந்து சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஈஷா யோகா மையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக அலுவலர் சுவாமி ஈகா அளித்துள்ள விளக்கத்தில், 'மா மதி, மா மாயு (சன்னியாசம் அடைவதற்கு முன்பாக கீதா, லதா) ஆகியோரின் பெற்றோர் தெரிவித்துள்ள புகாரால் மனவேதனை அடைந்துள்ளோம். அவர்கள் இருவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கி இருக்கிறார்கள். யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி தங்க வைக்கவில்லை.
அவர்களது பெற்றோர் தெரிவிக்கும் புகாரில் உண்மையில்லை. மதிப்புமிக்க மையத்தின் புகழை கெடுக்கும் வகையில் செயல்படும் அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்' எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரம்யா பாரதி கூறும்போது, "இரு தரப்பிலும் இருந்தும் மனுக்கள் அளித்துள்ளார்கள். விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.