மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந் தவர் செங்கல் சூளை அதிபர் வீரணனின் மகள் விமலாதேவி(21). ஆசிரியர் பயிற்சி முடித்தவர். வீரணனின் செங்கல் சூளையில் போலிப்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார்(24) வேலை செய்து வந்தார். விமலாதேவியும், திலீப் குமாரும் காதலித்து வந்ததை விமலாதேவியின் பெற்றோர் எதிர்த்த நிலையில், விமலா தேவியை திலீப்குமார் கடத்தி சென்றுவிட்டார் என வீரணன் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் கடந்த ஜூலை 22-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மறுநாளே வீரணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தந்தையைப் பார்க்க சென்ற விமலாதேவியை குடும்பத்தினர் சமரசம் பேசி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த செப் டம்பர் 8-ம் தேதி விமலா தேவிக்கு விருப்பமே இல்லாமல், வருஷநாட்டைச் சேர்ந்த குருசாமி மகன் சதீஷ்குமாருக்கும் விமலா தேவிக்கும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் நடத்தி யுள்ளனர். இதையடுத்து செப். 23-ல் தனக்கு நிச்சயம் செய்த சதீஷ்குமாரை அழைத்துக் கொண்டு விமலாதேவி வத்தல குண்டுச் சென்றார். காதலன் திலிப்குமாரையும் அங்கு வரவழைத்தார். அங்கு திலீப்குமா ருக்கும், சதீஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இங்கு நடந்த பிரச்சினை குறித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. பின்னர் விமலாதேவி சத்திரப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து விமலாதேவியை சமாதானம் பேசி, குடும்பத்தினர் கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்துள் ளனர்.
இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி நள்ளிரவில் விமலாதேவி வீட்டில் தூக்குபோட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை உறவினர்கள் காவல் துறையினருக்கு தெரியாமலேயே மயானத்தில் எரித்துவிட்டனர். இதுகுறித்து பூதிப்புரம் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், போலீஸாருக்குத் தெரியாமல் உடலை எரித்ததாக விமலாதேவியின் பெற்றோர் அக். 2-ம் தேதி கைது செய்யப் பட்டனர். இதையறிந்த திலீப் குமார் தான் காதலித்த பெண்ணை உறவினர்கள் கவுரவக் கொலை செய்துவிட்டதாக எஸ்பி விஜயேந்திர பிதாரியிடம் புகார் செய்தார். இதையடுத்து விமலா தேவி உடல் எரிக்கப்பட்ட மயானத்தில் எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.
திலிப்குமார் புகார்குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி குமரவேலு, இன்ஸ்பெக்டர் எஸ்தர்ராணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களது விசாரணையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அக்டோபர் 3-ம் தேதி விமலாதேவியின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேரும் அக்டோபர் 3-ம் தேதி உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் விருமாண்டி, பாண்டி, சுரேஷ் ஆகியோர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சதீஷ்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை.
விமலாதேவியை பாலக் காட்டில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திலீப்குமார் திருமணம் செய்துகொண்டதாகவும், இச்சம்பவத்தில் விமலாதேவி தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினரே கவுரவ கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துவிட்டதாக நாடகமாடுவதாகவும் கூறி, பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
‘8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’
விமலாதேவி இறப்பு தொடர்பாக திலீப்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், ‘விமலா அவரது வீட்டில் மர்மமான முறையில் அக்டோபர் 1-ம் தேதி நள்ளிரவு இறந்துவிட்டதாக மறுநாள் எனக்கு தகவல் கிடைத்தது. எனது மனைவி விமலா, கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று எனக்கு வலுவான சந்தேகம் உள்ளது. எனவே, இந்த மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கவும், தற்போது சென்னையில் வசிக்கும் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது குற்ற விசாரணை நடத்தவும், எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இந்த வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மதுரை காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பான மற்றும் தற்போது விசாரணை அதிகாரி சேகரித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர், காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அலுவலரை நியமித்து விசாரணையைத் தொடர வேண்டும். இறுதி அறிக்கையை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விமலாதேவி இறப்பு எந்தச் சூழ்நிலையில் நடந்துள்ளது என்பது பற்றியும், அச்சம்பவத்துக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் ஐ.ஜி. அந்தஸ்துள்ள அதிகாரி விசாரணை நடத்த காவல்துறைத் தலைவர் உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை முடியும் வரையிலும், நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையிலும் மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் இந்த உத்தரவு நகல் கிடைத்த 4 வாரத்துக்குள் மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.