தமிழகம்

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க கோடிக்கணக்கில் பேரம்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் அணி மாறத் தொடங்கினர். இதனைத் தடுப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டனர்.

எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக ஓபிஎஸ் அணிக்கு மாறிய எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ‘‘சொந்த ஊரில் இருந்த வந்த எம்எல்ஏக்களை விமான நிலையத்தில் மடக்கி ரூ.2 கோடி தருவதாக கூறினர். எம்எல்ஏ விடுதியில் இருந்து ஆளுநர் மாளிகை சென்றபோது ரூ.4 கோடியானது. கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தபோது ரூ.6 கோடி தருவதாக உறுதி அளித்தனர். ஒரே நேரத்தில் பணமாக திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாகக் கூறினர்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டது. ஓபிஎஸ் முதல்வரானால் நாங்கள் 11 பேரும் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்) அமைச்சர்களாகி விடுவோம். ரூ.500 கோடிதான் எங்கள் இலக்கு’’ என பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT