புதுச்சேரியில் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி இதுவரை 73.6 சதவீத குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.
தட்டம்மை, ரூபெல்லா நோய்களை ஒழிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் எம்ஆர்ஆர் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பிப்ரவரி 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது சிறார் வரையில் புதுச்சேரியில் உள்ள 3.1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்த வதந்திகள் பரவியதால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டினர். ஆனாலும் அரசு இதுகுறித்து உரிய விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டது. இதன்மூலம் இதுவரையில் 73.6 சதவீதம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் 74.7 சதவீதம், காரைக்காலில் 65 சதவீதம், ஏனாமில் 71, மாஹேயில் 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நடக்க உள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.