சென்னை புறநகரில் உள்ள பேரூராட்சிகளில் குப்பை கொட்ட இடம் இல்லாததால் தினமும் எரிக் கும் சம்பவம் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 17 பேரூராட்சிகள் உள்ளன. இதில் சென்னை புற நகர் பகுதியில் மாடம்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர், மாங் காடு, பீர்க்கன்காரணை, பெருங் களத்தூர், சிட்லபாக்கம், நந்தி வரம் - கூடுவாஞ்சேரி போன்ற பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் தினமும் சேகர மாகும் பல டன் குப்பையை கொட்ட இடமில்லாததால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டை, சுடுகாடு போன்றவற்றில் பேரூராட்சி நிர்வாகங்கள் கொட்டு கின்றன. இதனால் நீர்நிலைகள் சுருங்கி வருகின்றன. நிலத்தடி நீரும் கடுமையாக மாசு அடை கிறது. அதுமட்டுமின்றி தினமும் சேகரமாகும் குப்பையை பேரூ ராட்சி நிர்வாகங்களே எரித்து வருகின்றனர்.
சமீபத்தில் வீசிய ‘வார்தா’ புயலால் ஏராளமான மரக்கழிவுகள் உருவாகின. ஏற்கெனவே போதிய இடவசதி இல்லாமல் குப்பையை எரிக்கும் நிலையில் இந்த மரக்கழிவுகளும் சேர்த்து எரிக்கப் படுகின்றன.
தினமும், குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுப் புறம் புகை மண்டலமாக மாறுகிறது. இந்த புகை அருகில் உள்ள குடியிருப்புகள், சாலை களில் சூழ்ந்து கொள்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் திணறல், தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலும் கடுமையாக மாசு அடைகிறது.
பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்றுவது மட்டுமே நிரந்தர தீர்வு என, பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை தரம் பிரிக்கும் பணியும் தொய்வடைந்துள்ளது.
குப்பை கொட்ட இடமில்லாமல் தற்போது பேரூராட்சி நிர்வாகங் கள் தவித்து வருகின்றன. குப்பையை நீர்நிலைகளில் கொட் டக் கூடாது என பசுமைத் தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ளது . இதனை யடுத்து வண்டலூர் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க காஞ்சி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது. இடத்தை அளவீடு செய்ய சென்றால் அளவீடு செய்யக்கூடாது என்று கீரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இதனால் உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட பேரூ ராட்சி உதவி இயக்குநர் கண்ணன் கூறியதாவது:
குப்பை கொட்ட இடம் கிடைத் தும் பொதுமக்களின் எதிர்ப்பால் பயன்படுத்த முடியவில்லை. மக்களிடம் திட்டத்தின் நோக்கத்தை விளக்கியும் அவர்கள் எதிர்ப்பை கைவிடவில்லை. இதனால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த மாதத்துக்குள் திட்டத்தை கீரப்பாக்கத்தில் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
திடக்கழிவு மேலாண்மை ஆலை
புறநகர் நகராட்சிகளில் சேகரமாகும் குப்பையை கையாள வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை ஆலை ரூ.44 கோடி செலவில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் சரிவர இயங்கவில்லை. ஆலையால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வேங்கடமங்கலம் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே காரணத்துக்காக கீரப்பாக்கம் கிராம மக்களும் அங்கு செயல்படவுள்ள திட்டத்தை எதிர்க்கின்றனர். குப்பையை கையாள முறையான நிரந்தர திட்டங்களையோ, வழிகளையோ அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.