தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பால்வளத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பால் வளத் திட்டங்களின் பயனாக கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஆவின் பால் கொள் முதல் 31.77 லட்சம் லிட்டராக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஆவின் வளர்ச்சிக்காக மதுரை பால்பண்ணை வளாகத்தில் ரூ.45 கோடியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் ரூ.82 கோடியில் பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும்.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர், மற்ற மாவட்டங்களில் 11 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு பால் விற்பனையை உயர்த்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பண் டிகை நாட்களில் நுகர்வோருக்கு தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 5 அதிநவீன பாலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 11 இடங்களில் நவீன பாலகங்கள் நிறுவப்படும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.