தமிழகம்

வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பொன்னேரி நீதிமன்றங்களில் 2-வது நாளாக தீவிர சோதனை: மிரட்டல் விடுத்த மர்மநபருக்கு வலை

செய்திப்பிரிவு

வெடிகுண்டு மிரட்டல் கடிதம் காரணமாக 2-வது நாளாக நேற்று பொன்னேரி நீதிமன்றங்களில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட முன்சீப் நீதிமன்றம், சார்பு நீதி மன்றம், குற்றவியல் நடுவர் நீதி மன்றம்-1 மற்றும் 2 என ஐந்து நீதிமன்றங்கள் உள்ளன.

இந்த நீதிமன்றங்கள், பொன் னேரி கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல்நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அருகே ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வேலை நாட்களில் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில், சமீ பத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் சார்பு நீதிமன்றத்துக்கு வந்த மர்ம கடிதம் ஒன்றில், 6-ம் தேதிக்குள் (நேற்று) பொன்னேரி சார்பு நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் பொன்னேரியில் உள்ள சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். மோப்ப நாய் லக்கியும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. நீண்ட நேரம் நடந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில், மிரட்டல் கடிதத் தில் 6-ம் தேதிக்குள் நீதிமன்றம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என கூறப்பட்டிருந்ததால், 2- வது நாளாக நேற்றும் பொன்னேரி நீதிமன்றங்களில் வெடி குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீ ஸார் 10-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.

இந்த சோதனையின்போது, நீதிமன்ற வளாகத்துக்கு வந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் பலத்த சோத னைக்குப் பிறகே உள்ளே அனு மதிக்கப்பட்டனர். 2-ம் நாள் சோத னையிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT