மூடிய மதுக்கடைகளை திறப்ப தற்கு வசதியாக மாநில நெடுஞ்சாலைகள், நகரங்களுக் குள் செல்லும் தேசிய நெடுஞ் சாலைகளை உள்ளாட்சி சாலை களாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக ஆகிய கட்சிகள் முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகற்றப்பட்ட இந்தக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதற்கும், விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவி்த்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலஇடங்களில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருமானத்தை பெரிதும் நம்பியுள்ள தமிழக அரசு, மூடப்பட்ட மதுபானக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள மாநில நெடுஞ்சாலைகளையும், நகரங்களுக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளையும் அந்தந்த உள்ளாட்சி சாலைகளாக மாற்ற முயற்சித்து வருவதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று திமுக தரப்பில் வழக்கறிஞர் பி.வில்சனும், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் அதன் தலைவரும், பாமக வழக்கறிஞருமான கே.பாலுவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்அமர்வில் நேற்று காலை முறையீடு செய்தனர்.
அதில், மூடிய மதுபானக் கடைகளை திறக்க நெடுஞ்சாலை களை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றக் கோரி நகராட்சி நிர்வாக ஆணையர் ஒரு அறிவிப்பாணையை அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி இந்த சாலைகளை வரும் ஏப்ரல் 25-க்குள் உள்ளாட்சி சாலைகளாக மாற்ற நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது எந்த உள்ளாட்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கள் கிடையாது. தனி அலுவலர்கள் தான் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வருகின்றனர். அவர்கள் தன்னிச்சையாக தீர்மானம் போட முடியாது. மதுக்கடைகளை திறப்பதற்காக இவ்வாறு உள் ளாட்சி சாலைகளாக மாற்றுவது சட்டவிரோதமானது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யவுள்ளோம். ஆகவே அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்’’ என்றனர்.
இதுதொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதை நாளை (இன்று ) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.