சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் தம்பிக்கு சொந்தமான அமெரிக்க கலைக்கூடத்தில் சோழர்கால பார்வதி, விநாயகர் ஐம்பொன் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவற்றை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விஜயநகரப் பேரரசு காலத்தை சேர்ந்த 2 துவாரபாலகர் சிலைகளை சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ (என்ஜிஏ) கடந்த 2005 ஆகஸ்ட்டில் ரூ.2.74 கோடிக்கு வாங்கியது. இதுகுறித்து சுபாஷ் கபூரின் தோழி செலினா முகமது கூறியபோது, கொல்கத்தா கிருஷ்ணகோலி கலைக்கூடத்தில் இருந்து இந்த சிலைகளை 1971-ல் தனது தந்தை வாங்கியதாகவும், அவர்தான் இந்த சிலைகளை தன்னிடம் கொடுத்ததாகவும் கூறி, அதற்கான மூலப் பத்திரங்களை அளித்தார்.
இந்த நிலையில், விருத்தாசலம் கோயில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரத்யங்கரா கற்சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக மும்பையில் ‘இந்தோ நேபாள் ஆர்ட் கேலரி’ நடத்தும் தொழிலதிபர் வல்லபபிரகாஷ், அவரது மகன் ஆதித்ய பிரகாஷ் ஆகியோர் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு போலீஸாரால் கடந்த ஆண்டு கைது செய் யப்பட்டனர். இவர்களிடம் விசாரித்தபோது தான் துவாரபாலகர் சிலைகள் ஆஸ்திரேலியா வில் இருப்பது தெரியவந்தது.
துவாரபாலகர் சிலைகளின் படங்களை சுபாஷ் கபூருக்கு 2004-ல் அனுப்பியுள்ளார் வல்லபபிரகாஷ். அதன்பிறகு, அந்த சிலை கள் கபூர் மூலமாக என்ஜிஏவுக்கு விற்கப்பட் டுள்ளது. கபூரின் லேப்டாப்பில் இருந்த தகவல் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.
இவை தமிழக சிலைகள் என்று தெரிந்தா லும், எந்த கோயிலுக்குச் சொந்தமானது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அதுபற்றிய விவரங்களைத் தெரிவிக்குமாறு 3 ஆண்டுகளுக்கு முன்பே போலீஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதற்கிடையில், சுபாஷ் கபூர் 2011-ல் கைதான பிறகு, நியூயார்க்கில் இருந்த அவரது ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கலைக் கூடம் முடக்கப்பட்டது. ஆனால், அவரது தம்பி ரமேஷ் கபூருக்குச் சொந்தமான கலைக் கூடங்கள் தொடர்ந்து இயங்குகின்றன. அங்கும் தமிழகத்துக்குச் சொந்தமான சோழர்கால ஐம்பொன் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ‘இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய்குமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு கன்டெய்னரில் வந்த பார்வதி, விநாயகர் ஐம்பொன் சிலைகளை சுங்கத் துறையினர் சந்தேகப்பட்டு தடுத்துவைத்தனர். அது தொடர்பான மூலப் பத்திரங்களில் சந்தேகம் வலுத்ததால் இந்திய அரசுக்கு தகவல் கொடுத்தனர். ‘இந்த சிலைகள் இந்தியா வில் திருடுபோனவையா?’ என்று தெளிவு படுத்துமாறு கூறினர். இந்தியத் தரப்பில் போதிய அக்கறை எடுத்து உரிய காலத்தில் பதில் கொடுக்காததால், அந்த சிலைகளை அமெரிக்க சுங்கத் துறை விடுவித்துவிட்டது. அவைதான் தற்போது ரமேஷ் கபூரின் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இவை தமிழகத்தின் எந்தக் கோயிலுக் குச் சொந்தமானவை என்பதை இன்னும் அறியமுடியவில்லை. எனினும், சிலைகளுக் கான மூலப் பத்திரத்தை துருவினால் முழு விவரங்களும் தெரிந்துவிடும். கலைக்கூடத்தில் இந்த சிலைகளுக்குப் பக்கத்தில் மதுக்கோப்பைகளுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். நாம் கோயிலில் வைத்து வணங்கும் சாமி சிலைகள் இப்படி சிறுமைப்படுத்தப்படுவதை பார்க்கும்போது நெஞ்சு பதைக்கிறது.
போலி ஆவணங்களை உருவாக்கி கடத்தல் சிலைகளை விற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தால் செலினா முகமது 2013-ல் தண்டிக்கப்பட்டார். துவாரபாலகர் சிலை விவகாரத்திலும் அதுபோலவே போலி ஆவணங்கள் தயாரித்துதான் விற்றுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சிலைகளை விரைவாக மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு டிஎஸ்பி சுந்தரம் கூறியபோது, ‘‘தமிழகத்தில் இருந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை விரைந்து மீட்டுவருகிறோம். சுபாஷ் கபூர் உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளையும் கைது செய்துள்ளோம். கபூரின் தம்பி ரமேஷ் கபூரின் கலைக்கூடத்தில் சோழர்கால சிலைகள் இருப்பதாக தற்போது முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் மீட்போம்’’ என்றார்.