தமிழகம்

ஆபரேஷன் புத்தூர்: காவல்துறை அலுவலர்கள் 245 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பக்ருதீன் உள்ளிட்டவர்களை கைது செய்வதற்கு, பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி, விசாரணைக்கு உதவிய காவல்துறை அலுவலர்கள் 245 பேருக்கு, தலா ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'போலீஸ்' பக்ருதீன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக காவல் துறையினர் 5.10.2013 அன்று கைது செய்தனர்.

இதுபோன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இன்றியமையாதவை. இதனைக் கருத்தில்கொண்டு, இவ்வழக்குகளிலும், இது தொடர்பான சில வழக்குகளிலும் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ள வேறு பலருக்கும் ரொக்கப் பரிசினை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, 4.10.2013 அன்று போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு முயற்சி செய்த ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரை எதிரி தாக்கி தப்ப முயற்சித்தபோது அங்கு உடனடியாக வந்து அந்தக் குற்றவாளியை மடக்கி கைது செய்வதற்கு பெரும் துணையாக இருந்த பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமாருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

மேலும், புத்தூரில் வீட்டில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய குற்றவாளிகளை வெளிக் கொணருவதற்கும், வீட்டிலிருந்த பெண் மற்றும் மூன்று குழந்தைகளை உயிருடன் வெளியே கொண்டு வருவதற் கும் குற்றப்பிரிவு கண்காணிப்பா ளருக்கு உதவியாக இருந்த மதுரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் விஜயபெருமாள் மற்றும் மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் மாரியப்பன் ஆகிய இரு வருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு ஆய்வாளருக்கு தகவல் அனுப்பி உதவி செய்த பெரியமேடு காவல் நிலைய பெண் காவலர் ராதிகாவுக்கு 2 லட்சம் ரூபாயும், மேற்படி வழக்குகளில் தக்க தகவலை தகுந்த சமயத்தில் அளித்த மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் திருநெல்வேலி சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் பண்டரிநாதன் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

இது தவிர, சென்னையில் பெரியமேடு காவல் ஆய்வாளருக்கு உதவி செய்த ஐந்து காவல் அலுவலர்கள், புத்தூரில் வெடிப் பொருட்களை கைப்பற்றி செயலிழக்கச் செய்த ஆறு பேர் மற்றும் பல்வேறு வழக்குகளில் எதிரிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவி செய்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள்; மேலும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு, சிறப்பு நுண்ணறிவுக் குழு, சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய பிரிவுகளில் பணியாற்றி பயனுள்ள தகவல்கள் சேகரித்தும், விசாரணைகளில் உதவி செய்தும் கடமை உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்கள் மொத்தம் 245 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT